சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சாத்தனூர் அணை திறப்பு விவகாரம் குறித்து காரசாரமாக விவாதம் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலினு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் ஒருவர் ஆட்சியை மற்றொருவர் குற்றம் சாட்டினர்.
தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரம் தொடங்கியதும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், முல்லைப்பெரியாறு அணை அதிமுக ஆட்சியில் ஆண்டுதோறும் முறையாக பராமரிக்கப்பட்டது. பராமரிப்பு பணிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால் கேரள முதலமைச்சரை சந்திக்கும்போது அதுகுறித்து முதலமைச்சர் பேச வேண்டும் என்று கூறினார்.
முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராக ‘இடையூறு’ என்ற வார்த்தையை இபிஎஸ் பயன்படுத்தியதற்கு சிபிஎம் எம்எல்ஏ நாகை மாலி எதிர்ப்பு தெரிவித்தார். கேரள அரசு தடுத்தால் ‘இடையூறு’ என்று தான் பொருள் என அவை முன்னவர் துரைமுருகன் இபிஎஸ் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சாத்தனூர் அணை திறக்கப்பட்டது குறித்தும், எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். சாத்தனூர் அணை முன்னறிவிப்பு இன்றி திறந்ததால்தான் வரலாறு காணாத சேதம் எற்பட்டதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது என கூறினார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே காரசாரான வாத்ங்கள் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவது குறித்து முறையான முன்னெச்சரிக்கை தரவில்லை – போதிய முன்னெச்சரிக்கை கொடுத்திருந்தால் விவசாய நிலங்கள் பெரிய அளவுக்கு பாதித்திருக்காது. சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பதாக அதிகாலை 2:45 மணிக்கு அறிவித்துவிட்டு அதிகாலை 3 மணிக்கே திறந்ததே பாதிப்புக்கு காரணம் என குற்றம் சாட்டினார்.
இதைத்தொடர்ந்து, சாத்தனூர் அணை திறக்கப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார். அப்போது, சாத்தனூர் அணை திறப்பு தொடர்பாக 5 வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பின்பு சாத்தனூர் அணையில் படிப்படியாக நீர் திறக்கப்பட்டது என்றார்.
கடந்த அதிமுக ஆட்சியில் முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டதால் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்று குற்றம் சாட்டியதுடன், செம்பரம்பாக்கம் ஏரியை அரசு யாருக்கும் சொல்லாமல் திறந்துவிட்டது என இந்திய கணக்காய்வு அறிக்கை தெளிவுபடுத்தியது என்று அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் புகாருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்தார். பல்வேறு இடங்களில் பெய்த மழைநீர் உபரி அடையாற்றில் கலந்ததால் மட்டுமே வெள்ளம் ஏற்பட்டது என்று அவர் கூறினார்.
சாத்தனூர் அணை நீர் திறப்பு, செம்பரம்பாக்கம் அணை நீர் திறப்பு குறித்து முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் விவாதம் நடைபெற்றது.
முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணை திறந்ததே 4 மாவட்டங்கள் நாசமானதற்கு காரணம்! டாக்டர் ராமதாஸ்…
5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைக்கு பிறகே சாத்தனூர் அணை திறக்கப்பட்டது! சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்