உயர்நீதிமன்றத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு அதற்கு மாற்றாக செங்கல்பட்டு அருகில் மாற்று இடம் தருகிறேன் என்று கூறினால் ஏற்றுக்கொள்ள முடியுமா ? என்று கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் கேள்வி எழுப்பினார்.
தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 31.37 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை காலி செய்ய வேண்டும் என்ற அரசு உத்தரவுக்கு எதிராக சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது இவ்வாறு கூறினார்.
கடந்த 35 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த பல்கலைக்கழகம் அந்த நிலத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் அதற்கான பணத்தை அரசுக்கு செலுத்துவதாகவும் கோரி வருகிறது.
இதனை ஏற்க மறுத்த தமிழக அரசு 4 வார காலத்துக்குள் அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று வட்டாட்சியர் மூலம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸ் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக்கு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சாஸ்த்ராபல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், அரசு புறம்போக்கு நிலத்துக்குப் பதிலாக மாற்று இடம் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ஆனால், அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் அதற்கு ஆட்சேபம் தெரிவித்து, ‘‘அந்தப் பல்கலைக்கழகம் கடந்த 35 ஆண்டுகளாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பிவிட்டு, தற்போது மாற்று இடம் வழங்குவதாகக் கூறுவதை ஏற்கமுடியாது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென இந்த நீதிமன்றம்தான் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இந்த பல்கலைக்கழகமும் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளது” என்றார்.
மேலும், “உயர்நீதிமன்றத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு அதற்கு மாற்றாக செங்கல்பட்டு அருகில் மாற்று இடம் தருகிறேன் என்று கூறினால் ஏற்றுக்கொள்ள முடியுமா ?” என்றும் கேள்வி எழுப்பினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக மூன்று நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 8 க்கு தள்ளிவைத்தனர்.