நியூஸ்பாண்ட்:
சசிகலா கடுமையாக எச்சரித்ததை அடுத்து, பரப்பன அக்ரஹாரா சிறைவாசலில் ஊடகத்தினரை தினகரன் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
மன்னார்குடி குடும்பங்களுக்குள், அரசியல் அதிகார போட்டி உச்சகட்டத்தில் இருக்கிறது. குறிப்பாக தினகரன் VS திவாகரன் இடையில்தான் உச்சகட்ட போர் என்பது அனைவருக்கும் தெரியும்.
தினகரனுக்கு எதிராக சீறி எழு்த திவாகரன், மன்னார்குடியில் அம்மா அணி அலுவலகத்தை சமீபத்தில் திறந்தார். அதோடு, தினகரனின் அ.ம.மு.க அணியின் முக்கிய நிர்வாகிகளையும் தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
முதல் விக்கெட்டாக, ராமநாதபுரம் முன்னாள் எம்.பி ராஜேஸ்வரன், திவாகரன் அணியில் இணைந்தார். மதுரை மேலூரில் தினகரன் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்றவர்களில் முக்கியமானவர் ராஜேஸ்வரன். இவர் நேற்று, “உண்மையான அ.தி.மு.க என்பது திவாகரன் அணிதான்!” என்று பேட்டியளித்தார். இதனையடுத்து, தினகரன் பக்கம் இருக்கும் மேலும் சில முக்கிய பிரமுகர்களை தன்பக்கம் இழுப்பதில் தீவிரமாக இருக்கிறார் திவாகரன்.
அதேநேரம், தினகரனின் செயல்பாடுகளைப் பற்றி, பெங்களூரு பரப்பபன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவின் கவனத்துக்குக் கொண்டு செல்ல கடும் முயற்சி மேற்கொண்டார் திவாகரன். ஆனால் அவரது முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. அந்த அளவுக்கு சசிகலாவுக்கு தகவல் செல்லும் வழியெங்கும் தனது ஆட்களை வைத்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார் தினகரன்.
அதையும் மீறி சமீபத்தில்தான் சில விசயங்கள் சசிகலாவிடம் திவாகரன் தரப்பு கொண்டு சென்றதாம். இந்த குடும்ப குதர்க்கங்களால் சிசிகலா மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம்.
சமீபத்திய சந்திப்பின்போது சசிகலா தனது அதிருப்தியை தினகரனிடம் கொட்டிவிட்டார் என்கிறார்கள்.
“குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் கொடுப்பது அரசியலில் இழப்பைத்தான் ஏற்படுத்தும் என்று பேசிக்கொண்டிருக்கிறாய். என்னையும் இப்படிச் சொல்லமாட்டாய் என்பது என்ன நிச்சயம்?
ஜெயலலிதா இருந்தவரை கட்யில் உன்னை அவர் சேர்க்கவில்லை. அவரது மறைவுக்குப் பிறகு கட்சிக்குள் நீ வர நான்தான் காரணம். ஆர்.கே.நகர் தேர்தலில் நீ வெற்றி பெறவும் நான்தான் காரணம்.
அதையெல்லாம் நீ மறந்துவிட்டாயா?
நீங்கள் அனைவரும் சொகுசாய் இருக்க.. நான் சிறையில் வாடுகிறேன்.
நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால் அதிகாரத்துக்காகவும், பணத்திற்காகவும் அடித்துக்கொள்கிறீர்கள்” என்று தினகரனை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டாராம் சசிகலா.
திவாகரன் நடவடிக்கைகள் குறித்து புகார் பட்டியல் வாசிக்க நினைத்திருந்த தினகரனுக்கு, சசிகலாவின் சீற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டதாம்.
இதனால்தான் எப்போதுமே ஊடகத்தினரை புன்னகையுடன் எதிர்கொள்ளும் தினகரன், ஊடகத்தினரை தவிர்த்துவிட்டு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் இருந்து வெளியேறினார் என்கிறார்கள்.