அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா, தமிழக முதல்வராக வரக்கூடாது என்ற முழக்கத்துடன் உருவாகியிருக்கிறது புதிய கட்சி ஒன்று.  அனைந்திந்திய புரட்சித் தலைவர் முன்னேற்ற கழகம் என்ற அந்த கட்சியின் தலைவர்  S.சக்கரவர்த்தியிடம் பேசினோம்.

“யாராக இருந்தாலும் மக்களை சந்தித்து பதவிக்கு வரவேண்டும்.  வீட்டுக்குள் இருந்து பின் வாசல் வழியாக ஆட்சிக்கு வரக்கூடாது. மக்களை சந்தித்து அவர்கள் தேர்வு செய்தால் எந்த பதவிக்கும் அழகு” என்றார் சக்கரவர்த்தி.

“யாரைச் சொல்கிறீர்கள்” என்று கேட்டதற்கு, “உங்களுக்கெல்லாம் தெரியாதா சார்” என சிரித்தார்.

இன்னொரு ஆச்சரியம், இந்த கட்சியை ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே துவங்கிவிட்டாராம். “அப்படியானால் ஜெயலலிதா ஆட்சியும் சரியில்லை என்கிறீர்களா” என்றோம்.
 அதற்கு அவர், “ஆமாம். சசிகலா கும்பலை தள்ளி வையுங்கள். அப்போதுதான் நீங்கள் சிறந்த ஆட்சியை அமைக்க முடியும் என்று ஜெயலலிதாவுக்கு கடிதங்கள் அனுப்பினோம். அவர் அவற்றை பொருட்படுத்தவில்லை. ஆகவே, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே…கடந்த செப்டம்பர் 9 அன்று இந்த கட்சியை ஆரம்பித்துவிட்டோம்” என்றார்.

அதோடு, “ஜெயலலிதா மரணம் மர்மமாக இருக்கிறது. ஆகவே நீதிவிசாரணை வேண்டும் என்று தொண்டர்களை திரட்டி போராடுவோம்” என்றார்.

சக்கரவர்த்தியிடம், “உங்கள் கட்சியின் நோக்கம் என்ன?” என்றோம்.

அவர் சொன்னார்:

“எம்ஜிஆர். பெயரை கட்சியின் பெயரில் வைத்திருந்தாலும், அவரது கொள்கைகள் எவற்றையும் தற்போதைய அ.தி.மு.க. ஆட்சி பின்பற்றுவதில்லை.  அவரது கொள்கைகளை திரும்ப கொண்டு வந்து எம்ஜிஆர் ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும். அதற்காக இந்த கட்சி உருவாக்கப்பட்டுள்ளது”

அப்படிப்போடு!

டெய்ல் பீஸ்: இவரது கட்சியின் சின்னம் , இரட்டை விரல்!