சென்னை

க்டோபர் 16 ஆம் தேதி அதிமுக பொன்விழாவையொட்டி மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா செல்வார் எனக் கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்று கடந்த பிப்ரவரி மாதம் தண்டனை முடிந்து விடுதலையானார். அவர் ஜெயலலிதா சமாதிக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக அவர் இதுவரை ஜெயலலிதா சமாதிக்கு வரவில்லை.  ஆனால் தொண்டர்களுடன் அவர் பேசி வருவதால் அதிமுகவைக் கைப்பற்ற மும்முரம் காட்டி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

சசிகலாவுடன் பேசும் தொண்டர்கள் ஒவ்வொரு முறையும் அவரை தலைமையேற்க வருமாறு அழைக்கிறார்கள். அதிமுக தலைமை அதிமுகவை பற்றிப் பேசுவதற்கோ உரிமை கொண்டாடுவதற்கோ சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் சசிகலாவிடம் பேசுபவர்கள் அமமுகவினர் தானேயொழிய அதிமுகவினர் அல்ல எனவும் கூறிவிட்டனர்.

1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி மதுரையில் அஇஅதிமுகவை எம்ஜிஆர் நிறுவினார்.  வரும் அக்டோபர் 17 ஆம் தேதி அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. அதிமுக பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

எனவே வரும் 16ஆம் தேதி ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.   அதைப் போல் ராமாவரம் எம்ஜிஆர் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.