பெங்களூரு:
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து டில்லி திஹார் சிறைக்கு மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா மற்றும் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் மீது நடந்த சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 2014ம் ஆண்டு அளிக்கப்பட்டது. இதில் நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம், மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என்று கூறி நால்வரையும் விடுவித்தார்.
இத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக சிறப்பு நீதிமன்றம் நால்வருக்கும் வழங்கிய தண்டனை மற்றும் அபராதத்தை உறுதி செய்தது.
இந்ச நிலையில் ஜெயலலிதா மரணமடைந்ததால் அவரை வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்தது. சசிகலா உள்பட மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் சசிகலா தனக்கு சிறப்பு சலுகைகள் கேட்டு பலமுறை சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்தார். ஆனால் தண்டனை கைதிகளுக்கு எந்தவித சலுகையும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது. சாதாரண அறையில் அவர் அடைக்கப்பட்டார்.
ஆனால் அடுத்த சில நாட்களிலேயே, சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுவதாக செய்திகள் கசிந்தன. சசிகலாவுக்கு உதவியாக சிறைக் கைதிகள் சிலர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் சசிகாலாவி்ன் அறியிலும் மின்சார அடுப்பு வைக்கப்பட்டு சிற்றுண்டிகள் செய்து தரப்படுவதாகவும் கூறப்பட்டது.
தவிர, சசிகலாவுக்காக சிறை அறையில் ஏ.சி. வசதி செய்து தரப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
விதிகளுக்கு மாறாக சசிகலா தினமும் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவதாகவும் செய்திகள் கசிந்தன.
இதுபோன்று தகவல்கள் வெளியாகும்போதெல்லாம், சிறைத்துறை உயர் அதிகாரிகள் மறுத்து வந்தனர்.
இதற்கிடையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளிடம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதாக கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரிக்க அவர் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், கஞ்சா பயன்படுத்திய சிறைக்கைதிகள் சிலர் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆகவே உடனடியாக இது குறித்து விசாரணை நடத்த கடந்த ஜூலை 10ம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறைக்கு டிஐஜி ரூபா திடீர் சோதனை மேற்கொண்டார்.
அப்போது, சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதையும் கண்டறிந்தார். பிரத்யேக சமையல் அறை அமைத்து கொடுக்கப்பட்டிருப்பதும், அதில் விசாரணை பெண் கைதிகள் சசிகலாவுக்கு சமைத்து கொடுப்பதும் தெரியவந்தது.
முத்திரை தாள் மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெல்கிக்கும் இதே போன்று சலுகை வழங்கப்பட்டு வருவதும் தெரியவந்தது.
ஆய்வின் போது தனக்கு கிடைத்த தகவல்களை டிஐஜி ரூபா, நான்கு பக்கங்கள் கொண்ட அறிக்கையாக தயார் செய்து, சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ், மாநில காவல்துறை இ்யக்குனர் ரூப்குமார் தத்தா உள்ளிட்ட உ்யரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். மேலும், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தருவதற்காக உயரதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் தரப்பட்டுள்ளதாக பேசப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிக்கை ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ரூபாவின் அறிக்கை குறித்து உயர்மட்டக்குழு விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சசிகலாவை டில்லியில் உள்ள திஹார் சிறைக்கு மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திஹார் சிறையில் மிக முக்கியமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு கட்டுப்பாடுகள் அதிகம். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலமாக உள்ளன. ஆகவே சசிகலாவை அங்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசி, சுதாகரன் ஆகியோரையும் திஹார் சிறைக்கு மாற்றவும் திட்டமிருப்பதாக பேசப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம், பாமக நிறுவனர் ராமதாஸ், “பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு ஆதரவாக விதி மீறல் நடைபெறுவதாக செய்திகள் வருகின்றன. அதே போல சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றவும் முயற்சி நடந்து வருவதாக கேள்விப்பட்டேன். அதனால் சசிகலாவை டெல்லி திஹார் சிறைக்கு மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.