தூத்துக்குடி:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை மனு கொடுத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், கடந்த 31ந்தேதி நான் தூத்துக்குடி சென்று, அங்கு பாதிக்கப்பட்ட பொதுமக்களை வீடுகளிலும்,, பொது மருத்துவ மனையிலும் சந்தித்து பேசியது குறித்து முதல்வரிடம் எடுத்துரைத்தேன் என்று கூறினார்.
மேலும், கலவரத்தைத் தூண்டும் எண்ணம் உள்ளவர் எவரும், குழந்தைகளுடனும், அன்பான குடும்பத்தின ருடனும் உணவு எடுத்துக்கொண்டு சென்றிருக்க மாட்டார்கள் என்பதையும் முதல்வரிடம் எடுத்துரைத்தேன் என்றும், அந்த மக்களின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தினேன் என்றும் கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களின்மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அவர்கள் எதிர்காலத்தை யும் தூத்துக்குடி மக்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்ற ஐயம் பரவலாக நிலவுகிறது. எனவே, இந்த வழக்குகள் உடனடியாக திரும்பப் பெறப்பட்டு அவர்கள் வாழ்க்கைக்கு நிம்மதி வழங்க வேண்டும் என்றும்,
பொதுமக்கள் பயம் கலந்த வாழ்க்கையில் இருந்து மீண்டு, எதிர்காலம் குறித்த நம்பிக்கை பிறந்து மனஅழுத்தம் குறைந்து மக்கள் சகஜ நிலை திரும்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கை களும் எடுக்கவேண்டும் என வலியுறுத்தினேன் என்றார்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலை எந்த ஒரு காரணத்திற்காகவும் மீண்டும் திறக்க வாய்ப்பளிக்காமல் இருக்கும் உத்திரவாதத்தை அனைவரும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் என்பதையும் தெரிவித்தேன் என்று சரத்குமார் கூறினார்.