மும்பை
மகாராஷ்டிர துணை முதல்வராகப் பதவி ஏற்றுள்ள அஜித் பவாருடன் எத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேள்வி எழுப்பி உள்ளார்
பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இருந்த வேளையில் திடீரென நேற்று காலை பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சில உறுப்பினர்கள் இணைந்து அரசு அமைத்தனர். பாஜகவின் தேவேந்திர ஃபட்நாவிஸ் முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.
தற்போது மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 105 உறுப்பினர்களும் தேசியவாத காங்கிரஸுக்கு 54 சட்டப்பேரவை உறுப்பினர்களும் உள்ளதால் இந்த கூட்டணி பெரும்பான்மையுடன் உள்ளதாக கூறப்பட்டது இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கட்சியின் அனுமதியின்றி அஜித் பவார் பாஜகவுடன் இணைந்ததாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பதவி ஏற்பு முடிந்த பிறகு அஜித் பவார் செய்தியாளர்களைச் சந்திப்பார் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவரும் அவருடைய ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களில் யாரும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. பதவி ஏற்பின் போது அவருடன் 11 உறுப்பினர்கள் மட்டுமே இருந்ததாகச் சொல்லப்படுகிறது. நேற்று தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தை சரத் பவார் நடத்தினார்.
அதற்குப் பின் தெற்கு மும்பையில் உள்ள ஒய் பி சவான் மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவார், “இன்றைய சந்திப்பில் எங்கள் கட்சியை சேர்ந்த 42 உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். மற்றவர்களும் மும்பைக்கு வந்துக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. அஜித் பவார் அமைச்சரவை குறித்து விவாதிக்க வேண்டும் என பொய்யான தகவலைக் கூறி அந்த 11 பேரை அழைத்துச் சென்றுள்ளார். அவர்களும் தற்போது எங்கள் பக்கம் உள்ளதால் அஜித் பவாருடன் எத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர் என அவர் தெரிவிப்பாரா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.