சென்னை

காஞ்சிபுரம் கோவில் மேனேஜர் சங்கரராமன் கொலை வழக்கு திரைப்படமாக எடுக்கப்படுகிறது.  அதில் ஜெயேந்திரராக அனுபம் கேர் நடிக்கிறார்

கடந்த 2004ஆம் வருடம் செப்டம்பர் 3ஆம் தேதியன்று காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோவில் மேனஜர் சங்கரராமன் அவர் அலுவலக அறையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.  இந்த வழக்கில் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்தது.

வழக்கு முடிவில் ஜெயேந்திரர் குற்றமற்றவர் எனக்கூறி விடுவிக்கப்பட்டார்.  இந்த வழக்கு இன்றளவும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

தற்போது இச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.  இதற்கு ”ஆச்சாரியா அரெஸ்ட்” என பெயர் சூட்டப்பட்டு கீழே ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம் என ஒரு வரி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப்படத்தை இயக்குபவர் கன்னட இயக்குனர் சீனிவாஸ் ராஜு.   ஜெயேந்திரராக நடிக்க அனுபம் கேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  மற்ற நடிகர்கள் தேர்வு நடை பெறுகிறது.  வரும் அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தெரிகிறது.

இது வழக்குகள் படமாகும் காலம்.  இதற்கு முன் சுவாதி கொலை வழக்கு படமானது தெரிந்ததே