இந்திய ரயில்வேயில் பணிபுரிந்த ஒருவர் எலன் மஸ்க்-கின் SpaceX நிறுவனத்தில் தற்போது பணிபுரிவதாக வெளியான தகவல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
வேலை தொடர்பான இடுகைகளை பகிர்ந்துகொள்ளும் சமூக ஊடகமான லிங்க்ட்இன் (LinkedIn)ல் சஞ்சீவ் சர்மா என்ற நபர் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி உள்ளது.
IIT Roorkee-யில் பட்டம் பெற்ற இவர் 1990 முதல் 2001 வரை இந்திய ரயில்வேயில் பொறியாளராக பல்வேறு நிலைகளில் வேலை பார்த்துள்ள பின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம்பெற்ற இவர் 2003ம் ஆண்டு சீ-கேட் என்ற உலகின் முன்னணி ஹார்ட்வேர் நிறுவனத்தில் பொறியாளராக பணியில் சேர்ந்துள்ளார்.
பிறகு வேறொரு துறையில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், SpaceX நிறுவனத்தில் 2013 முதல் 2018 வரை பணியில் இருந்துள்ளார் அதன் பிறகு மற்றொரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்ததாகவும் பின்னர் 2022ல் மீண்டும் SpaceX நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து அதில் தொடர்ந்து வருவதாகவும் தனது பயோ-டேட்டா-வில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக, ரயில்வே துறையில் வேலை கிடைத்தவர்கள் வேலையின் நிரந்தர தன்மையைக் கருதி அதிலேயே தொடரும் நிலையில் சஞ்சீவ் சர்மா என்பவரின் இந்த LinkedIn பதிவு இணையவாசிகளிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
சுமார் 35 ஆண்டுகாலம் பணியில் இருப்பதாகக் கூறியுள்ள இவரது வயது குறித்தும் இந்த வயதிலும் SpaceX நிறுவனத்தில் இவருக்கு வாய்ப்பு அளித்திருப்பது குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இருந்தபோதும் இந்திய ரயில்வேயில் பொறியாளராக பணியாற்றிய ஒருவர் தற்போது ராக்கெட் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுவரும் SpaceX நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக வெளியான இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.