மும்பை: சிஏஏ எனப்படும் குடியுரிமை சட்டம் அமல்படுத்தும் விவகாரத்தில் பின்வாங்க மாட்டோம் என்று சொன்ன அமித் ஷாவை வெளியேற்றுவோம் என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத் கூறி இருக்கிறார்.
மராத்தி பத்ராகர் சங்கத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் அமைப்பானது ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தது. அதில் கலந்து கொண்ட சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத் பேசுகையில், சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சி பற்றி முஸ்லிம்கள் அச்சப்பட வேண்டாம் என்றார்.
அவர் மேலும் பேசியதாவது: மகாராஷ்டிராவில் நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம் என்பதைக் காட்டினோம். நீங்களும் பயத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
நாடு அனைவருக்கும் சொந்தமானது என்று அடிக்கடி பால் தாக்கரேவிடம் கூறுவேன். நாங்கள் அனைவரும் ஒன்று, இந்த நாடு நாட்டிற்கு விசுவாசமாக இருக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமானது.
சிஏஏ சட்டத்தில் இருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டேன் என்று கூறியிருக்கும் அமைச்சர் அமித் ஷாவை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்த ராவுத், நீங்கள் ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டீர்கள் என்று சொல்கிறீர்கள்? நாங்கள் உங்களை வெளியே தள்ளுவோம்.
நாங்கள் அனைவரும் சகோதரர்கள், மராத்தி பத்ராகர் சங்கத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று பேசினார்.