பா.ஜ.க. தலைவருடன் சிவசேனா எம்.பி. சந்திப்பு..
மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-அமைச்சராக இருக்கிறார்.
‘மகா விகாஸ் அகாடி’’ என இந்த கூட்டணி அழைக்கப்படுகிறது.
இந்த கூட்டணி அரசு அமைந்த நாள் முதல், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்-அமைச்சரும், பா.ஜ.க.. தலைவருமான தேவேந்திர பட்நாவிஸ், உத்தவ் தாக்கரே அரசை வறுத்தெடுத்து வருகிறார்..
பதிலுக்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராத், பட்நாவிசுக்கு சுடச்சுடப் பதிலடி கொடுப்பது வழக்கம்.
கொரோனா பிரச்சினை தொடங்கி நடிகை கங்கனா ரணாவத் விவகாரம் வரை இரு தலைவர்களும் மோதிக்கொள்ளாத நாளே இல்லை.
இந்த நிலையில் மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் பட்நாவிசும், சஞ்சய் ராத்தும் சந்தித்துப் பேசியுள்ள, நிகழ்வு அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து மாநில  பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான பிரவீன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ‘’ இருவரும் என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் சஞ்சய் ராத், யாரையாவது சந்திக்கிறார் என்றால், அரசியலில் பிரளயம் ஏற்படும் எனச் சொல்வார்கள்’’ எனப் பொடி வைத்துப் பேசியுள்ளார்.
சஞ்சய் ராத் தனது பங்குக்கு,’’ உரிய மரியாதை இல்லா விட்டால், உறவு முறிந்து விடும்’’ என்ற இந்தி கவிதையை, தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் என்னவோ நடக்கிறது என்பது மட்டும் உறுதி.
-பா.பாரதி.