சென்னை: தூய்மை பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதால், பணி இழந்த தூய்மை பணியாளர்கள் மீண்டும் பணி வழங்க வேண்டும் பல மாதங்களாக தொடர் போராட்டங் களை எடுத்து வரும் நிலையில், நவம்பர் 5ந்தேதி அன்று கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதி எண் 153 மற்றும் 285 படி பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சியின் 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவதை கண்டித்தும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கடந்த 90 நாட்களுக்கு மேலாக ரிப்பன் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கெனவே அமைச்சர்கள், மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல் துறையினரால் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து சென்னையில் அவ்வப்போது வெவ்வறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். பின்னர் அவர்கள் காவல் துறையால் கைது செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், நேற்று திடீரென மெரினா கடலில் இறங்கி தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடல் அலையில் இறங்கி கையில் பதாகைகளை ஏந்தி ஆபத்தான வகையில் தங்களுடைய போராட்டத்தை நடத்தினர். இதை கண்ட பொதுமக்கள்அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினரும் அங்கு விரைந்து வந்து, அவர்களை வெளியே வரும்படி அறிவுறுத்தினார்.
அப்போது பேசிய தூய்மைப் பணியாளர்கள், “கடந்த 90 நாட்களுக்கு மேலாக நாங்கள் போராடி வருகிறோம். ஆனாலும் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் காதுகளில் எங்களது கோரிக்கை விழவில்லை. தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதை கைவிட்டு, எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். 5 மற்றும் 6 வது மண்டலங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்கள் செய்து வந்த பணி நிலையிலேயே பணிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதி எண் 153 மற்றும் 285 படி, தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தர செய்ய வேண்டும். கடந்த 3 மாதங்களாக பணி இல்லாமல் மிகவும் சிரமத்தில் தவிக்கிறோம். குழந்தைகளுக்கு உணவு கூட வழங்க முடியாதபடி வாழ்கை சூழல் சிரமத்தில் உள்ளது. எனவே, தமிழக முதல்வர் இதில் தலையிட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு பணி வழங்க வேண்டும்” என கூறினர்.