நெட்டிசன்:

சந்திரபாரதி (Chandra Barathi) அவர்களின் முகநூல் பதிவு:

என்னிடம் ஒரு சந்தனக் கட்டையிருந்தது. நான் அதனை முறைப்படி விலைக்கு வாங்கி யிருந்தேன். அதிலிருந்து ஒரு வடிவம் செய்ய நினைத்தேன். எனக்கு மரத்தில் சிலை செய்யும் வித்தையும் திறனும் கிடையாது. ஆனால், வடிவமைக்கும் ஆர்வமும் அதனையே வியாபாரப் பொருளாக்கி செல்வம் ஈட்டும் நோக்கமும் இருந்தது.

மரத்தில் சிற்பம் செய்ய வல்ல நுண்கலைஞரைத் தேடினேன். சிறந்த ஒருவரை சந்தித்தேன். எனது ஆவலைச் சொன்னேன். மரத்தில் நான் விரும்பும் வடிவத்தை செதுக்கித் தர சம்மதித்தார். வடிவத்தை உருவாக்கித் தர தனக்குத் தேவையான சன்மானத்தைக் குறிப்பிட்டுக் கேட்டார், சம்மதித்தேன். உதவியாளர்களுக்கும் சன்மானம் தர வேண்டும் என்றார், ஒப்புக் கொண்டளித்தேன். மரத்தில் வடிவமைக்க இன்ன பிற கலைஞர்களின் சேவை தேவை, அவர்களுக்கும் சன்மானமளிக்கப் பணித்தார், இன்முகத்தோடு அளித்து மகிழ்ந்தேன்.

இறுதியில், நான் கொடுத்திருந்த சந்தனக் கட்டை நான் விரும்பிய மர வடிவமாக உருப்பெற்றது. சிற்பக் கலைஞருக்கு எனது நன்றியைத் தெரிவித்து அவரது சன்மானத்தை முழுமையாக அளித்து மகிழ்ந்தேன்.

என் இருப்பிடம் கொண்டு வந்து, பலர் பார்க்க சந்தன மர வடிவத்தை காட்சிப்படுத்தினேன். எனது சொத்தில் ஒன்றாக அது மாறியது. அதனை நான் எப்படி வேண்டுமானுலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலை.

சந்தன மர வடிவத்தின் அழகில் மயங்கி பல ஊர்களில் அதன் கண்காட்சி நடந்தது.

திடீரென்று ஒரு நாள் சிற்பக் கலைஞர் எனக்கு ஒரு தாக்கல் அனுப்பினார். வடிவத்தை அவர் செதுக்கியதால் அது அவரது சொத்தென்றும், வேறு யாரும் அதனை வைத்து கண்காட்சி நடத்தக் கூடாதென்றும் அவ்வாறு நடத்தினால் அவருக்கு தண்டம் கட்ட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

சொல்லுங்கள் தோழர்களே, என் செல்வத்தை முதலீடு செய்து உருவாக்கப்பட்ட சந்தன மர வடிவம் என் சொத்தா, இல்லை, சன்மானம் பெற்றூக் கொண்டு தனது சேவையை வழங்கி செதுக்கிக் கொடுத்த சிற்பக் கலைஞரின் சொத்தா?

அந்த சிற்பி போலத்தான் திரைப்பட இசையமைப்பாளர்.

சந்தன மரத்துக்குச் சொந்தக்காரராக இருந்து அதை வடிமைக்க பணமும் கொடுத்து உருவாக்கியவர் போலத்தான் தயாரிப்பாளர்.

இப்போது சொல்லுங்கள்..  இசையமைப்பாளருக்கே பாடல் சொந்தம் என்பது சரிதானா?