ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது தடைகளை விதித்துள்ளதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த கரோலின், ‘இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர பொதுமக்களிடமிருந்து நிறைய அழுத்தம் இருந்தது. இதையடுத்து, இந்தியா மீது தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.’
‘எந்தவொரு சந்திப்பும் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும் என்ற பரிந்துரைகளை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இந்தப் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்,’ என்று அவர் கூறினார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் மத்தியஸ்தம் செய்துள்ளார் என்பதை மீண்டும் வலியுறுத்திய கரோலின் “இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலின் முடிவை நாங்கள் கண்டிருக்கிறோம். இல்லையெனில், அது ஒரு அணு ஆயுதப் போருக்கு வழிவகுத்திருக்கும்” என்று அவர் கூறினார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த லீவிட், “வர்த்தகப் பிரச்சினையை முதன்மைப்படுத்துவதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதலை டிரம்ப் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்” என்றார்.
முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை குறைகூறிய அமெரிக்க அரசு, உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போருக்கு இதன்மூலம் இந்தியா நிதியளிப்பதாகக் குற்றம்சாட்டியது.
அதோடு இந்திய பொருட்கள் மீது 25% வரி விதித்துள்ள அமெரிக்க அரசு ஆகஸ்ட் 27 முதல் மேலும் 25% என மொத்தம் 50 சதமாக உயர்த்த திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.