சென்னை: சனாதனம் குறித்து சர்ச்சைக்கு உரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா மகாராஜ்மீது மதுரை காவல் துறையினர் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதுபோல உதயநிதியின் பேச்சை திரித்து கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாக அகில இந்திய பாஜக தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் அமித் மாளவியா மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்றும், ‘டெங்கு, மலேரியா மற்றும் கரோனாவை போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது’ எனக் கூறி இருந்தார். இவரது கருத்து இந்துக்களின் மீதான கடும் விமர்சனமாக வட மாநிலங்களில் உருவெடுத்து வருகிறது. நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் தானாகவே வழக்கு பதிவு செய்ய வேண்டும் என முன்னாள் நீதிபதிகள் உள்பட பலர் கடிதம் எழுதி வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், உ.பி.யைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி தலையை கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் நேற்று முன்தினம் உதயநிதியின் தலையை யாரும் சீவவில்லை என்றால் நானே சீவுவேன். அதற்காக வாள் ஒன்றையும் தயாரித்துள்ளேன். உதயநிதி தலையை வெட்ட ரூ.10 கோடி போதாது எனில் அந்த தொகையை உயர்த்தவும் தயார் என கூறியிருந்தார். இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அமைச்சரை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், அச்சுறுத்தும் விதமாக வீடியோ வெளியிட்ட பரமஹம்ச ஆச்சார்யா மற்றும் அவரது வீடியோவை X தளத்தில் பதிவிட்ட ஐடியின் பயனாளர் பியூஸ்ராய் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி திமுகவின் மதுரை மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் தேவசேனன் சார்பில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில், சாமியார் மற்றும் அவரது ஐடி பயனர்உ ள்பட இருவர் மீதும் கலகத்தை விளைவிக்கும் நோக்கில் செயல்படுதல், ஒற்றுமைக்கு குந்தகமாக செயல்படுதல், அமைதியின்மையை வேண்டுமென்றே ஏற்படுத்துதல், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல், தீய எண்ணத்தை உருவாக்குதல், கொலை மிரட்டல் என செக்ஷன் 153, 153A (1) (a), 504, 505(1)(b), 505(2) & 506(ii) IPC 6 பிரிவுகளின் கீழ்வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதுபோல உதயநிதியின் பேச்சை திரித்து கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாக அகில இந்திய பாஜக தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் அமித் மாளவியா மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில், “ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு சனாதன தர்மத்தை பற்றி பேசியதாக காணொளியினை டிவிட்டர் பக்கத்தில் பா.ஜ.க வின் அகில இந்திய தொழில்நுட்ப அணியின் தலைவர் அமித் மாளவியா பதிவிட்டார். அதில் உதயநிதி ஸ்டாலின் பேச்சை திரித்து, சனாதன தர்மத்தை பின்பற்றி வரும் 80 சதவீதம் மக்களின் இன படுகொலைக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று பொய் செய்தியினை செப்டம்பர் 2 ஆம் தேதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமித் மாளவியாவின் இந்த பதிவிற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் ஒருபோதும் பொதுமக்களின் இனபடுகொலைக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், சனாதன தர்மத்தின் கோட்பாடுகளில் ஜாதி மத பாகுபாடுகள் இருக்கிறது என்றும், சமூகநீதி பாதிக்கப்படுகிறது என்றும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக பேசி வருவதாகவும் விளக்கமளித்தார். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சை வேண்டுமென்றே திரித்து, தொடர்ந்து இருபிரிவினருக்கு இடையே வன்முறையினை தூண்டும் வகையிலும், மாறுபட்ட கொள்கை கோட்பாடுகளை கொண்ட பல்வேறு பிரிவினருக்கு இடையில் வெறுப்பை தூண்டும் வகையிலும், செயல்பட்டு வரும் திரு. அமித் மாளவியாவும், அவர் தலைமையில் உள்ள பா.ஜ.க. அகில இந்திய தொழில் நுட்ப அணியினரும் இந்த பொய் செய்தியினை தொடாந்து பரப்பி வருகின்றனர்.
இவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க கோரி திருச்சிராப்பள்ளி தெற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் திரு. K.A.V. தினகரன். என்பவர் செப்டம்பர் 6 ஆம் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில் அமித் மாளவியா மீது சட்டப்பிரிவுகள் 153 (கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு வேண்டுமென்றே செயல்படுதல்), 153 (A) (வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகையை வளர்தலும், ஒற்றுமைக்கு குந்தகமான செய்கைகளை செய்தலும்), 504 (உட்கருத்துடன் அமைதியின்மையை வேண்டுமென்றே நிந்தித்தல்), 505 (1) (b) (பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மதுரை காவல்துறையினர் உ.பி. சென்று சாமியாரை கைது செய்வார்களா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதே வேளையில் உதயநிதிமீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதால், மற்ற மாநில போலீசாரும் அவரை கைது செய்ய தமிழ்நாடு வருவார்களா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.