சியோல்
சாம்சங் நிறுவனம் மடித்து வைத்துக் கொள்ளக்கூடிய மொபைல் ஃபோனை வரும் 2018ல் வெளியிடுகிறது.
மடித்து வைத்துக் கொள்ளக்கூடிய மொபைல் ஃபோன்களை சாம்சங் நிறுவனம் தயாரித்து வருவதாகவும், இந்த வருடம் ஆரம்பத்தில் அந்த ஃபோன்கள் விற்பனைக்கு வரும் எனவும் பல அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியாகின. ஆனால் சாம்சங் நிறுவனம் காலாக்சி 8 மற்றும் நோட் 8 ஆகிய மாடல்களை வெளியிட்டதால் அந்த செய்திகள் மறைந்து போய் விட்டன.
தற்போது சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்பான காலக்சி X என்னும் மாடலுக்கு தென் கொரிய அரசுத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இது சாம்சங் கனவு மாடலான மடித்து வைக்கக் கூடிய மொபைல் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சாம்சங் நிறுவன அதிகார் கோ டாங் ஜின் மடித்து வைக்கக் கூடிய மொபைல் வரும் 2018ல் வெளியிடப்படும் என சூசகமாக தெரிவித்துள்ளார். இது வரை இந்த மொபைலின் இறுதி வடிவம் மற்றும் அதன் ஸ்பெசிஃபிகேஷன் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஆயினும் முன்பு மாதிரியாக வெளியிடப்பட்ட படத்தை வைத்து பார்க்கும் போது இது பர்சை போல இரண்டாக மடித்து சட்டை அல்லது பாண்ட் பாக்கெட்டில் வைக்கும் அளவுக்கு இருக்கும் என தெரிகிறது. அதாவது மடித்து வைக்கும் போது 5 இன்ச் மொபைல் அளவுக்கு இருக்கும். மடிக்காமல் இருந்தால் 7 இன்ச் டாப்லெட் போல இருக்கும்.
முதலில் மடித்து வைக்கக் கூடிய மொபைல் சுமார் 1 லட்சம் உற்பத்தி செய்யப்படும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் வெளியிடுவது 2018 என்பதால் மேலும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படலாம் என தெரிய வருகிறது.