பூந்தமல்லி: சாம்சங் நிறுவனத்தில் மேலும் 13 பேர் சஸ்பெண்டு இருப்பது தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும்  மவுனம் காத்து வருவது விவாதப்பொருளாக மாறி உள்ளது. ஆலையை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

 காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் தொழிற்சங்க பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2024  ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.  இந்த விஷயத்தில் திமுக அமைச்சர் 3 பேர் ஆலைக்கு ஆதரவாக பேச்சுவார்த்தை நடத்தியதால், கம்யூனிஸ்டு கட்சி தொரிற்சங்கத்தினருக்கும், திமுகவுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் திமுக தலைமையின் வேண்டுகோளை ஏற்று, கம்யூனிஸ்டு தொழிற் சங்கத்தினர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். அதன்படி,   தொழிலாளர்களின்   38 நாட்கள் போராட்டம் மற்றும் 212 நாட்கள் சட்டப் போராட்டத்திற்குப் பிறகே போராட்டம்  கைவிடப்பட்டது.  

இதைத்தொடர்ந்து, சிஐடியு (கம்யூனிஸ்டு) தொழிற்சங்கம் பதிவும் செய்யப்பட்டது. தொழிலாளர்களும் பணிக்கு திரும்பி பணியாற்றி வந்தனர். ஆனால்,  சாம்சங் இந்தியா நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில், தொழிலாளர்களை பலிவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே ஜனவரி 4 -ந்தேதி  சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் நிர்வாகி குணசேகரனை கடந்த பணியிடை நீக்கம் செய்தது. தொடர்ந்து அடுத்தநாள் மோகன்ராஜ், சிவநேசன் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.  மேலும் பல தொழிலாளர்களை மிரட்டி,  தொழிற்சங்கத்தில் இருந்து விலகுவதாக  சுமார் 400க்கும் மேற்பட்ட ஊழியர் களிடம்  நிறுவனம் தரப்பில், கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. ஆலை நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சிஐடியு தொழிற்சங்கத்தின்ர் தங்களது தலைமையிடம்  (கம்யூனிஸ்டு கட்சியினர்) தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும்,  கடந்த ஆண்டு போராட்டத்தின்போது தலையிட்ட தமிழ்நாடுஅரசும், அமைச்சர்களும், சாம்சங் நிறுவனத்தின் பணி நீக்கம் குறித்து வாய் திறக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது.

இது  சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள்  மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதைத்தொடர்ந்து,  சி.ஐ.டி.யு ஊழியர்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இந்த போராட்டம் 15 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், தற்போது மேலும் 13 பேரை சாம்சங் நிறுவனம் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது  தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து,  சாம்சங் தொழிற்சாலையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  அதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.