ஆண்டிகுவா: ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தன் சகவீரர் ஒருவர், தன்னை அழைத்துப் பேசி, தான் ‘காலு’ என்று அழைத்ததன் காரணத்தை விளக்கியதாக தெரிவித்துள்ளார் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி.
தான் கடந்த 2013-14ம் ஆண்டுகளில் ஐபிஎல் ஐதராபாத் அணியில் இடம்பெற்றிருந்தபோது, தன்னையும், இலங்கையின் திசாரா பெரெராவையும் சக வீரர்கள் சிலர் ‘காலு’ என்று அழைத்ததாகவும், அப்போது அதன் அர்த்தம் புரியவில்லை என்றும், ஆனால் பின்னாளில் அர்த்தம் (கருப்பன்) புரிந்து தான் கோபமடைந்ததாகவும் கூறிய டேரன் சமி, அவ்வாறு அழைத்த வீரர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டுமெனவும் கூறியிருந்தார்.
அவரின் இந்த வார்த்தைகள் பரபரப்பைக் கிளப்பின. இந்நிலையில், ஐதராபாத் அணியில் தன்னை அவ்வாறு அழைத்த ஒரு வீரர் தன்னை அழைத்துப் பேசியதாகவும், அன்பின் பொருட்டே தான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதாக விளக்கம் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார் சமி.
அவர் மேலும் கூறியதாவது, “நான் எனது முன்னாள் வீரர் ஒருவருடன் சுவாரஸ்யமான உரையாடலை மேற்கொண்டேன். அன்பின் பொருட்டே அவர் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதாக எனது சகோதரர் உறுதிப்படுத்தினார். எனவே, எதிர்மறையான அம்சங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம்” என்றார் சமி.