சென்னை: நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் செங்கோலை அகற்ற வேண்டும் என இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.  இதற்கு தமிழ்நாடு எம்.பி.க்கள்  தரப்பில் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை  தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உ.பி. முதல்வர் யோகி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதற்கிடையில், சமாஜ்வாதி எம்.பி.யின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்து விட்டார்.

கடந்த 2023ம் ஆண்டு மே 28ந்தேதி அன்று  புதிய நாடாளுமன்றக் கட்டிடம்  திறப்பு விழா நடைபெற்றது.  இதை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு  வலது புறத்தில்  செங்கோல் நிறுவப்பட்டது. இந்த செங்கோல் நிறுவப்படுவதற்கு முன்பாக  தமிழ்நாட்டைச்சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் வேத மந்திரங்களும் தேவாரமும் ஓத செங்கோலுக்கு பூஜை மேற்கொள்ளப்பட்டது. மேலும், செங்கோலுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து, புனித செங்கோல் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி விழுந்து வணங்கினார்.

இதையடுத்து, வேத மந்திரங்கள் ஓத, தேவாரம் பாட, மங்கள இசை இசைக்க தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் புனித செங்கோலை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்கள்.

புனித செங்கோலை கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்ற பிரதமர் மோடி, அங்கு சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் செங்கோலை நிறுவினார். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லாவும் உடன் இருந்தார். இதைத்தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டித்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் செங்கோல் எடுத்து வரப்படுகிறது.

இன்று  18வது மக்களவையின் முதல் கூட்டு கூட்டத்தில் உரையாற்ற வந்த குடியரசு தலைவரை வரவேற்று அழைத்து வரம்போது, பாராளுமன்ற ஊழியர் ஒருவர் செங்கோலை கையில்எடுத்து சென்ற நிகழ்வுகளும் நடைபெற்றது.

இவ்வாறு புனிதமான செங்கோலை,  செங்கோலை நீக்க வேண்டும் என  சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஒருவர் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். இதற்கு திமுக உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்தவொரு எம்.பியும்  எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் உள்ள செங்கோலை நீக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி சபாநாயகருக்கு  கடிதம் எழுதியுள்ளார். அதில்,  சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை உடனே,  அகற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. செங்கோல் என்பது,  முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழ்வதாகும். அதனால்,  செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் என கூறியிருந்தார்.

ஆனால், சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆர்.கே.சவுத்ரியின் கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.   செங்கோல் தொடர்பான, சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில் சபாநாயகர் அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாது, நிராகரிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு பெருமையை சேர்த்துள்ள செங்கோல் விவகாரத்தில், திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியைச்சேர்ந்த சமாஜ்வாதி கட்சி குரல் எழுப்பியுள்ள நிலையில், அதற்கு தமிழக எம்.பி.க்கள் தரப்பில் இருந்து எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை நாடாளுமன்றத்தில் பறைசாற்றி வரும் செங்கோலை அகற்ற கூறியதற்கு,  எதிர்ப்பு தெரிவிக்க ஒரு தமிழன் கூட நாடாளுமன்றத்தில் இல்லையா என சமூக வலைதளங்களிள் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
ஆனால், சமாஜ்வாதி எம்.பி.யின்  கோரிக்கைக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுத்துள்ளார்.  இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. ‘செங்கோல்’ இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. ‘செங்கோல்’ பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்தியா கூட்டணி கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது. ‘செங்கோல்’ இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

 செங்கோல் வரலாறு:

ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் அடைந்தபோது அதை அடையாளப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நிகழ்வே புனித செங்கோல் வழங்கும் நிகழ்வு. தமிழகத்தின் பழமையான ஆதீனமான திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில், பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் இந்த செங்கோல் வழங்கப்பட்டது. இதற்காக திருவாவடுதுறை ஆதீன தம்பிரான், ஓதுவார், மங்கள இசை இசைப்பவர்கள் ஆகியோர் செங்கோலுடன் தனி விமானம் மூலம் டெல்லி சென்றனர். ஆதீன தம்பிரான் முதலில் செங்கோலை ஆங்கிலேயர்களின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டனிடம் வழங்கினார். பின்னர் அவரிடம் இருந்து செங்கோலை வாங்கிய அவர், அதற்கு புனித நீர் தெளித்து தேவாரம் பாடி செங்கோலை ஊர்வலமாக எடுத்துச் சென்று பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கினார். பிரதமர் ஜவஹர்லால் நேரு புனித செங்கோலைப் பெற்றுக்கொண்டார். இவ்விதமாகவே, ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததற்கான சடங்குகள் நிகழ்ந்தேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

18வது நாடாளுமன்ற முதல் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு இன்று உரையாற்றுகிறார்..