காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலின் போது பரம்பரை வரி மற்றும் இந்தியர்களின் இன பாகுபாடு குறித்து அவர் கூறிய கருத்துக்கள் சர்ச்சையானதை அடுத்து அயலக அணித் தலைவர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்தார்.

கடந்த மாதம் ‘தி ஸ்டேட்ஸ்மேன்’ என்ற ஆங்கில நாளிதழுக்கு சாம் பிட்ரோடா அளித்த பேட்டியில், வட இந்திய மக்களை வெள்ளையர்களுடனும், மேற்கு இந்தியாவில் வாழ்பவர்களை அரேபியர்களுடனும், கிழக்கில் வாழ்பவர்களை சீனர்களுடனும், தென்னிந்தியாவில் வாழும் மக்களை ஆப்பிரிக்கர்களுடனும் ஒப்பிட்டு பேசினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு சாம் பிட்ரோடா அளித்த ஒப்புமைகள் தவறானவை, துரதிருஷ்டவசமானவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை. காங்கிரஸ் கட்சி இந்த ஒப்புமைகளிலிருந்து தன்னை முற்றிலும் விலக்கிக் கொள்கிறது, அவற்றை மறுக்கிறது,” என்று கூறியிருந்தார்.

இது சாம் பிட்ரோடாவின் தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதனையடுத்து மே 8ம் தேதி காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சாம் பிட்ரோடா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அந்தப் பதவியில் அவர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.