சேலம்: சேலத்தில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது குறித்து மாவட்ட காவல்துறை விளக்கம் வெளியிட்டு உள்ளது.

கரூர் சம்பத்தினால் இரு மாதங்களாக தனது மக்கள் சந்திப்பு பயணத்தை ஒத்தி வைத்திருந்த தவெக தலைவர் விஜய், மீண்டும் தனது தேர்தல் பிரசார பயணங்களை மேற்கொள்ள உள்ளார். அவரது அடுத்த மக்கள் சந்திபப்பு கூட்டம் சேலத்தில் நடைபெறும் வகையில், சேலத்தில் சீலநாயக்கன்பட்டி, போஸ் மைதானம், கோட்டை மைதானம் ஆகிய 3 இடங்களில் தவெகவினர் அனுமதி கோரியிருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக விஜயின் கரூர் சம்பவத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுமார் இரண்டு மாதத்திற்கு பிறகு விஜய் மீண்டும் தனது பிரசார பயணத்தை முன்னெடுக்க உள்ளார். முதல்முறையாக சேலத்தில் டிசம்பர் 4-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு நிர்வாகிகள் சார்பில் போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அவரது மனுவை நிராகரித்து சேலம் காவல்துறை த.வெ.க.வினருக்கு விளக்க கடிதம் அளித்துள்ளது. அந்த கடிதத்தில், டிச.4-ந்தேதி வெளி மாவட்டங்களில் பாதுகாப்பு பணிக்காக செல்வதால் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, டிசம்பர் 4-ம் தேதி திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி நடைபெறும் கிரிவல நிகழ்ச்சிக்குச் சேலம் மாநகர காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள்.
டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு நினைவு தினம் என்பதால், அதை ஒட்டி வரும் நாட்களிலும் மாநகரம் முழுவதும் காவலர்கள் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இந்த முக்கியப் பணிகளின் காரணமாக, டிசம்பர் 4-ம் தேதி அன்று தவெக பொதுக்கூட்டத்திற்குத் தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்குவது கடினம் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், விஜய் பிரசார நிகழ்ச்சியில் எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் என்ற தகவல் மனுவில் இல்லை என்றும், வெளி மாவட்டங்களில் இருந்து எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்ற தகவலும் இல்லை என்று சுட்டிக்காட்டி உள்ளதுடன், மனுவில் குறைகளை நிவர்த்தி செய்து புதிய மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
அடுத்த முறை மனு அளிக்கும்போது 4 வாரங்களுக்கு முன்னர் மனு அளிக்க வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டுள்ளது.
இதையடுத்து, விஜய் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் மற்றொரு தேதியைத் தேர்வு செய்து புதிய விண்ணப்பத்தை நான்கு வாரங்களுக்கு முன்னதாகச் சமர்ப்பிக்க வாய்ப்புள்ளது.