சேலம்: சேலம் நாடாளுமன்ற திமுக எம்.பி பார்த்திபனிற்கு கொரோனா அறிகுறி தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திமுக சார்பில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால், திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் பம்பரமாக சுழன்றுவருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான எஸ்.ஆர் பார்த்திபனும் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வந்த திமுகவின் கிராம சபை கூட்டம், பொதுக்கூட்டம் என பல்வேறு கூட்டங்களுக்கு தொடர்ந்து சென்று குறைகளை கேட்டறிந்து தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக இயங்கி வந்த நிலையில், அவரது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து, அவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், அவரின் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பார்த்திபன் எம்.பி. சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி எம்.டி.எஸ் நகர் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.