சேலம் மாவட்டம், காருவள்ளி , பிரசன்ன வெங்கட் ரமணர் ஆலயம்.

திருவிழா:
சித்ரா பவுர்ணமி, வைகாசி வசந்த உற்சவம், ஆனி திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, ராமநவமி.
தல சிறப்பு:
இத்தல பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
பொது தகவல்:
இங்கு பெருமாள் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைக்கின்றனர்.
பிரார்த்தனை:
சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து வணங்கிட திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், ஐஸ்வர்யம், வேலை, பதவி உயர்வு கிடைக்கும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை.
கால்நடைகளுக்கு பிணி ஏற்பட்டால் பிரகாரத்தில் உள்ள குழல் ஊதும் கண்ணனுக்கு வெண்ணெய்காப்பு சாத்தி வழிபடலாம்.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
தலபெருமை:
கோயிலுக்கு முன்புறம் சிறிய வெங்கட்ரமணர் சிலை உள்ளது. இவரது தோளில் பக்தர்கள் துளசியை ஒட்டி வைத்து விட்டு, தமது வேண்டுதல்களையும், புதிதாக செய்யவிரும்பும் செயல்களுக்கு அனுமதியையும் பெற நண்பர்களிடம் சொல்வது போல உரிமையுடன் சொல்கின்றனர். அப்போது, பெருமாளின் தோளில் இருக்கும் துளசி கீழே விழுந்தால் உத்தரவு கிடைத்ததாக எண்ணி அச்செயலை செய்கின்றனர். சுற்றுவட்டார மக்கள் காலங்காலமாக இம்முறையில் உத்தரவு கேட்டபின்பே தமது வீட்டு வைபவங்களைத் தொடங்குகின்றனர்.
வாயுவுக்கும், ஆதிசேஷனுக்கும் இடையே சண்டை நிகழ்ந்தபோது, வாயுவின் பலத்தால் தெறித்த ஆனந்த பர்வதத்தின் ஒரு பகுதியே இக்குன்று என வரலாறு கூறுகிறது.திருப்பதியில் கோயில் கொண்டுள் ளதைப்போலவே இவ்விடத்தில், வெங்கடேசப்பெருமாள் அருளுகிறார். எனவே, இத்தலம் “சின்னத்திருப்பதி’ எனப்படுகிறது.கருவறையில் சுவாமிக்கு முன்பு ஆதியில் தோன்றிய சுயம்பு உள்ளது. தாயார் அர்த்தமண்டபத்தில் தனியே அருளுகிறார். திருப்பதிக்கு சென்று இறைவனை வணங்கமுடியாதவர்கள் இங்கு வந்து சுவாமியை வணங்கலாம்.இங்கு திருமணம் செய்தால் இல்வாழ்வு சிறக்கும் என்பதால் அதிகளவில் திருமணங்கள் நடக்கிறது.
தல வரலாறு:
திருப்பதியில்குடிகொண்டிருக்கும் வெங்கடேசப்பெருமாள், குளிக்கச்சென்றார். தலைக்கு தேய்க்க அரப்பை தேடிபோது, அங்கு அரப்பு இல்லை. தன் மனைவியிடம் கேட்கலாம் என்று பார்த்தார். அவரும் அங்கில்லை. தாயாரைத்தேடி பல இடங்களுக்கும் சென்ற பெருமாள் அரப்பு மரங்கள் நிறைந்திருந்த இக்குன்றுக்கு வந்தார். குன்றின் அழகில் மயங்கிய அவர், அரப்பு எடுத்து குளித்துவிட்டு இங்கேயே தங்கினார் என்று புராணம் கூறுகிறது.பிற்காலத்தில், இக்குன்றில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்கூட்டத்தில் ஒரு பசு மட்டும் புற்று ஒன்றில் தொடர்ந்து பால் சொரிந்தது. வியந்த மக்கள் புற்றுக்கு அடியில் பெருமாள் சுயம்புவாக இருந்ததைக்கண்டு, அவருக்கு கோயில் கட்டினர்.