ராமண்ணா வியூவ்ஸ்:
“காஷ்மீர்.. பியூட்டிபுல் காஷ்மீர்” என்று பாராளுமன்றத்தில் ராகம்போட்டு பாடி, அனைவரையும் மிரள வைத்த அ.தி.மு.க. உறுப்பினர் நவனீதகிருஷ்ணன், தனது பேச்சில் குறிப்பிட்ட ஒரு தகவல், “நான் இப்போது இவ்வளவு சிகப்பாக இருக்கிறேன் என்றால் அதற்கு நான் கர்ப்பப்பையில் இருக்கும்போது என் அம்மா காஷ்மீர் குங்குமப்பூ சாப்பிட்டதே காரணம்” என்று சொல்லியிருக்கிறார்.
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை நிஜமாகவே சிகப்பாக பிறக்குமா…? மருத்துவம் என்ன சொல்கிறது?
“ பெண்கள் தங்களது கர்ப காலத்தில் காய்ச்சிய பாலில் குங்குமப்பூவை கலந்து, தொடர்ந்து இரவு வேளையில் குடித்து வந்தால், பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்ற நம்பிக்கு முன்பு பலருக்கும் இருந்தது. தற்போது நவீனதகிருஷ்ணன் போல இதை நம்பும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதாவது குங்குமப்பூவுக்கும், குழந்தையின் நிறத்துக்கும் தொடர்பே இல்லை. அறிவியல் சொல்வது இதுதான்.
அப்படியானால் குங்குமப்பூவுக்கு மருத்துவ குணமே இல்லையா?
நிறைய இருக்கிறது. அதே நேரம், குங்குமப்பூவால் வேறு நன்மைகள் உண்டு. . குங்குமப்பூ துவர்ப்பு தன்மை கொண்டது. இது ஜீரணத்துக்கு நல்லது. சமைத்து முடித்ததும் அனைத்து உணவிலும் குங்குமப்பூவை கலக்கலாம். இதனால் உணவில் நல்ல மணம் வீசுவதோடு சுவையும் கூடும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.
கர்ப்பணிகள் கருவுற்ற 5ம் மாதத்தில் இருந்து 9ம் மாதம் வரை குங்குமப்பூவை சாப்பிடலாம். இதனால் ரத்தம் சுத்தமடையும். குழந்தை பிறந்த பிறகும் சாப்பிடலாம். இது ரத்த சோகை ஏற்படாமலும் தடுக்கும். நன்கு பசியை தூண்டும்.
ஆனால் , குங்குமப்பூவை குறிப்பிட்ட அளவே உட்கொள்ள வேண்டும். அதிக அளவு சாப்பிட்டால் உடலுக்கு கேடு.
குங்குமப்பூவை எப்படி தயாரிக்கிறார்கள்?
குங்குமப்பூ செடியின் தாவரவியல் பெயர், சாப்ரன் குரோக்கஸ். இந்த தாவரத்தின் பூவிலுள்ள சூலக தண்டு, மற்றும் சூலக முடிகள் ஆகியவை, தனியே பிரிக்கப்பட்டு, வெயிலில் உலர்த்தப்பட்டு பின்பு அதனை பொடியாக்கி குங்குமப்பூவை தயாரிக்கிறார்கள்.
ஒரிஜினல் குங்குமப்பூவை எப்படி அறிவது?
சூடான தண்ணீரில் 4, 5 குங்குமப்பூவை போட்டால் பூ மெதுவாக கரைந்து மின்னக்கூடிய தங்க நிறத்தில் தண்ணீரின் நிறம் மாறும். நறுமணம் வீசும். 24 மணி நேரத்துக்கு பூவிலிருந்து நிறம் வந்து கொண்டிருக்கும். இது ஒரிஜினல்.
சூடான தண்ணீரில் பூவை போட்டவுடன், சிவப்பு நிறத்தில் தண்ணீர் மாறி விடும். நறுமணம் வீசாது. சிறிது நேரத்திலேயே பூவிலிருந்து நிறம் வருவது நின்று விட்டால் அது போலி.
ஆக, குங்குமப்பூவை பயன்படுத்துங்கள்.. அதே நேரம், குழந்தை சிகப்பாக பிறக்க அது உத்தரவாதம் அல்ல.