போபால்
உடல்நிலை சரியில்லை என நீதிமன்றத்தில் அறிவித்த சாத்வி நேற்று போபாலில் ஒரு விழாவில் கலந்துக் கொண்டுள்ளார்.

போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற சாத்வி பிரக்ஞா தாகுர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார். தற்போது இவர் ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் வருவதில்லை என்பதால் நீதிபதி அதிருப்தி அடைந்தார். கடந்த மாதம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் வாரம் ஒரு முறையாவது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
திங்கட்கிழமை அன்று சாத்வி பிரக்ஞா தாகுர் சார்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில் அவர் உடல்நிலை சரியில்லாததால் இந்த வாரம் முழுவதும் வழக்கு விசாரணையில் கலந்துக் கொள்ள விலக்கு அளிக்க வேண்டும் என கோரி இருந்தார். அவர் நேற்று இந்த வழக்கு விசாரணையில் ஆஜராக வேண்டி இருந்தது.
புதன்கிழமை மாலை போபாலில் சையத் முஷ்டாக் அலி நத்வி இல்லத்துக்கு சென்ற சாத்வி ரம்ஜானை முன்னிட்டு இனிப்பு மற்றும் பழங்களை அளித்தார். அதன்பிறகு அவர் போபாலில் உள்ள கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளதால் மருத்துவமனையில் உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றம் அவருக்கு வியாழன் அன்று விசாரணையில் கலந்துக் கொள்வதில் இருந்து விலக்கு அளித்தது. ஆனால் வியாழன் அதாவது நேற்று காலையில் மருத்துவமனையில் இருந்து சாத்வி வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அவர் ஓய்வில் உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மதியம் போபாலில் உள்ள எம் பி நகரில் மகாராணா பிரதாப் பிறந்த தின விழா நடந்தது. உடல் நிலை சரியில்லாததால் நீதிமன்றத்துக்கு செல்ல முடியவில்லை என அறிவித்திருந்த சாத்வி பிரக்ஞா தாகுர் இந்த விழாவில் கலந்துக் கொண்டு மகாராணா பிரதாப் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார்.
[youtube-feed feed=1]