ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு எம்.எல்.ஏ.வுக்கு சச்சின் நோட்டீஸ்..

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும்,  துணை முதல்-அமைச்சராகவும் இருந்தவர் சச்சின் பைலட்.

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி அவர் துணை முதல்வர் பதவியில் இருந்தும், கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

சச்சின் மீது, ராஜஸ்தான் மாநிலம் பாடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கிரிராஜ் சிங் மலிங்கா, பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தினார்.

‘’கடந்த டிசம்பர் மாதம் சச்சின் பைலட்டை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினேன். அப்போது அவர் ’’ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ,க,.வுக்கு வாக்களிக்குமாறு கூறினார். அவ்வாறு வாக்களிக்க 35 கோடி ரூபாய் தருவதாக ஆசை காட்டினார்’’ என இரு தினங்களுக்கு முன்பு கிரிராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உடனடியாக இதனை சச்சின் பைலட் திட்டவட்டமாக மறுத்தார். இந்நிலையில், ‘ என்னைப் பற்றி தவறான தகவல் தெரிவித்ததற்காக ஒரு ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும். ‘’ என்று கிரிராஜுக்கு சச்சின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும், ’’என்னைப் பற்றி அவதூறு கூறியதால், செய்தியாளர்கள் முன்னிலையில் 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றும் அந்த நோட்டீசில் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

சச்சின் மீது புகார் கூறிய எம்.எல்.ஏ.வான கிரிராஜ் கடந்த சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

கடந்த செப்டம்பர் மாதம், அந்த கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-பா.பாரதி.