கொச்சி: மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை மீண்டும் சபரிமலை அய்யப்பன் கோவில்  நடை திறக்கப்படுகிறது. மண்டல விளக்கு பூஜை முடிவடைந்து, 27ந்தேதி நடை சாத்தப்பட்ட நிலையில்,  இன்று மாலை நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஜனவரி 14ந்தேதி மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம்  நடைபெறுகிறது. இதையொட்டி, கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

ஏற்கனவே மண்டல விளக்கு மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. பல லட்சம் பக்தர்கள் அய்யப்பனை தரிசித்து வந்தனர்.  மண்டலபூஜையின் நிறைவு நாளான 27ந்தேதி அன்று  அய்யப்பன் தங்க அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்றைய தினம் இரவு மண்டல கால பூஜை நிறைவடைந்ததும் நடை அடைக்கப்பட்டது.

இதையடுத்து,  தற்போது மகர விளக்கு பூஜைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.  இன்று மட்டும் 32 ஆயிரம் பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க  முன்பதிவு செய்துள்ளனர். நாளை முதல் வழக்கம் போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம், கலச பூஜை நடைபெறும். மதியம் 1.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும்.

தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாடுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து 19ந்தேதிவரை கோவில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மகரவிளக்கு பூஜை சமயத்திலும் தினசரி 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. அதறக்ன முன்பதிவுகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இதுமட்டுமின்றி,பக்தர்கள் வசதிக்காக  நிலக்கல்-பம்பை, பம்பை- நிலக்கல் இடையே இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கப்படும். அதே போல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சபரிமலைக்கு சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.