சபரிமலை :
சபரிமலை தரிசனத்திற்கு, வரும் திங்கள் மட்டும் செவ்வாய் கிழமைகளில் மீண்டும் முன்பதிவு துவங்கப்பட உள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், கொரோனா கட்டுப்பாடுகளால், மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும், 1,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான முன்பதிவு, நவ., 1ம் தேதி துவங்கிய சில மணி நேரத்தில், 60 நாட்களுக்கும் முடிந்து விட்டது. வான பக்தர்கள் வருகையால் சபரிமலை களைகட்டவில்லை. போதிய வசூலின்றி, தேவசம்போர்டு கவலையில் ஆழ்ந்துள்ளது. சபரிமலைக்கு
தற்போது வரும் அழைப்புகளில் பெரும்பாலும், தரிசன முன்பதிவு தொடர்பாகவே வருகின்றன. ‘ஆன்லைன் முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கும். மாலை போட்டு வந்தால் திருப்பி அனுப்பவீர்களா’ என, கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். இந்நிலையில், நவ., 23 அல்லது 24ல், முன்பதிவு மீண்டும் துவங்க உள்ளதாகவும், தினமும், 2,000 – 5,000 வரை பக்தர்களை அனுமதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பம்பையில் இரவு, 7:00 மணிக்கு பின், பக்தர்கள் மலையேற அனுமதி கிடையாது. இரவு, 9:00 மணிக்குள் சன்னிதானம் வர வேண்டும். தாமதமாக வரும் பக்தர், தரிசனம் நடத்தாமல் திரும்ப வேண்டிவரும். 18ம் படியேறி தரிசனம் முடித்த பின், மாளிகைப்புறம் செல்லும் பாதையில்,
இருமுடி கட்டு பிரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சன்னிதானம், மரக்கூட்டம், சரல்மேடு ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு உதவ, அய்யப்ப சேவா சங்க தொண்டர்கள் தயாராக உள்ளனர். இவர்களுக்கு முக கவசம், கையுறை, கவச ஆடை போன்றவற்றை கேரள சுகாதாரத்துறை வழங்கியுள்ளது. சபரிமலையில் அக்., மற்றும் நவ., மாதங்களில் 150 – 175 கடைகள் வரை ஏலம் விடப்படும். ஆனால் இந்த ஆண்டு, 77 கடைகள் மட்டுமே ஏலம் போனது. ஏல தொகை மிகவும் குறைக்கப்பட்டிருந்தும், ஏலம் கேட்க ஆளில்லை. நிலக்கல், பம்பை, சன்னிதானத்தில் முக்கிய இடங்களில் உள்ள கடைகள் மட்டுமே ஏலம் போனது.
கடந்த ஆண்டு, 35 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது, இந்த ஆண்டு, 4 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போனது. ஏலம் எடுத்த கடைகளிலும் போதிய வியாபாரம் இல்லை என, வியாபாரிகள் கூறுகின்றனர்.