சென்னை: நடிகர் சங்க டிரஸ்டி பதவியைவிட்டு எஸ்.வி.சேகர் விலகினார். மேலும் சங்க நடவடிக்கை குறித்து தான் கேட்ட கேள்விக்கு நிர்வாகம் பதில் அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விசால் தலைமையிலான பாண்டவர் அணி சார்பில் போட்டியிட்டதன் மூலம், சங்க அறக்கட்டளை டிரஸ்டி பொறுப்புக்கு வந்தார் எஸ்.வி.சேகர்.
இந்த நிலையில் எஸ்.வி.சேகர் தனது டிரஸ்டி பதவியை விட்டுவிலகுவதாக அறிவித்தார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
“நடிகர் சங்கத்தில் கையெழுத்து போடுவதற்குதான் டிரஸ்டி பதவி என்ற நிலை இருக்கிறது. மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் பல்வேறு குளறுபடிகள் நடந்து விட்டன, சங்க நடவடிக்கை தொடர்பாக நான் கேட்ட கேள்விக்கு நிர்வாகம் பதில் அளிக்கவில்லை. சாலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் எதிர் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாட இருக்கிறேன். நடிகர் சங்க நிர்வாகம் செய்யும் தவறுகளுக்கு மனசாட்சிக்கு விரோதமாக என்னால் உடன்பட முடியாது” என்று எஸ்.வி. சேகர் தெரிவித்தார்.