‘டெலிகிராம்’ செயலியின் தலைமை செயல் அதிகாரி பவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யா-வில் பிறந்தவரான பவெல் துரோவ் தற்போது துபாயில் வசித்து வரும் நிலையில் அஜர்பெய்ஜான் நாட்டில் இருந்து தனி விமானம் மூலம் பாரிஸ் நகரின் வடக்கே உள்ள லே பெர்கெட் விமான நிலையம் வந்த போது கைது செய்யப்பட்டார்.
அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்ற தகவலை பிரான்ஸ் அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை என்றபோதும் அவர் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததை அடுத்து பிரான்ஸ் அதிகாரிகளுடன் ரஷ்ய தூதரக அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்கள்.
எந்த ஒரு சார்பும் இல்லாமல் தகவல்களை பகிர்ந்துகொள்ள உதவும் டெலிகிராம் செயலியை ரஷ்யா, உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் என உலகெங்கும் 90 கோடிக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்திவருகிறார்கள்.
வாட்ஸப் உள்ளிட்ட மற்ற செயலிகள் ரஷ்யாவில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் டெலிகிராம் மட்டுமே முக்கிய தகவல் பரிமாற்ற செயலியாக அங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த செயலியில் பகிரப்படும் தகவலின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பயனர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று இந்நிறுவனம் மீது பிரான்ஸ் அரசு தொடர்ந்து புகார் எழுப்பி வந்தது.
இந்த நிலையில் பவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளது ரஷ்யாவில் மட்டுமன்றி டெலிகிராம் செயலி பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பவெல் துரோவ் கைதை கண்டித்து உலகெங்கும் உள்ள பிரெஞ்சு நாட்டு தூதரகங்கள் முன்பு ஆர்பாட்டம் நடத்தவும் அழைப்பு விடப்பட்டுள்ளது.