டெல்லி: ரஷிய அதிபர் புதின் இரண்டு நாள் பயணமாக டிசம்பர் 4ந்தேதி இந்தியா வருகிறார் என இந்திய வெளியுறவுத்துறை அறிவித்து உள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 4-5 தேதிகளில் இந்தியா வருகிறார். புதினின் வருகை, இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மறுபரிசீலனை செய்ய இந்திய மற்றும் ரஷ்ய தலைமைக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. தனது வருகையின்போது டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியுடன், ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஜனாதிபதி புதினை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” பிரதமர் மோடி கிரெம்ளினின் உயர் உதவியாளரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய வருகையின் போது புதின், பிரதமர் மோடியுடன் புடின் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரௌபதி முர்மு ரஷ்ய தலைவரை ராஷ்டிரபதி பவனில் வரவேற்று அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் விருந்து வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஆகஸ்ட் மாதம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மாஸ்கோ பயணத்தின் போது ரஷ்ய ஜனாதிபதியின் இந்திய பயணம் அறிவிக்கப்பட்டது. அப்போது தேதிகள் இறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையில் 2025 செப்டம்பரில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டின் போது பிரதமர் மோடியும் புடினும் சந்தித்தனர். ரஷ்ய தலைவரின் லிமோசினில் ஒரு மணி நேரம் கலந்துரையாடினர்.
இதைத்தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில், ரஷ்ய ஜனாதிபதியின் உதவியாளர் நிகோலாய் பட்ருஷேவ் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தபோது, அவரிடம் பேசிய பிரதமர் மோடி, அடுத்த மாதம் இந்தியாவில் புடினை வரவேற்க ஆவலுடன் இருப்பதாகவும், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கூறினார்.
புடினின் வருகை இந்தியாவின் புவிசார் அரசியல் மூலோபாயத்தில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கலாம், புது தில்லி வாஷிங்டனுடன் அதன் சிக்கலான உறவுகளை வழிநடத்தும் போதும், இந்தோ-ரஷ்ய உறவுகளின் மீள்தன்மையை வலுப்படுத்துகிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது வாரண்டைக் கருத்தில் கொண்டு, உக்ரைன் போருக்கு மத்தியில் புடின் வெளிநாட்டு பயணத்தை கணிசமாகக் குறைத்துள்ளார். ICC-யில் ஒரு கட்சியாக இல்லாததால், ரஷ்ய தலைவரை தடுத்து வைக்க இந்தியா கடமைப்படவில்லை.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ரஷ்ய அதிபர் புதினின் வரவிருக்கும் அரசு முறை சுற்றுப்பயணம், இந்தியா மற்றும் ரஷ்யாவின் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும், ‘சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மை’ குறித்த தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்தவும், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்கும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.