அண்டை நாடுகளுடனான சண்டையை உலக யுத்தமாக மாற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்வதாகவும் ரஷ்யா தனது இருப்புக்காகப் போராடுகிறது என்றும் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களிடையே ஆண்டுக்கு ஒருமுறை பேசுவதை வழக்கமாகக் கொண்ட ரஷ்ய அதிபர் புடின் கடந்த ஆண்டு இந்த கூட்டத்தை நடத்தவில்லை.
ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் செய்தியாளர் சந்திப்பு மற்றும் மக்களின் கேள்விகளுக்கு தொலைபேசியில் பதிலளிக்கும் நிகழ்ச்சியும் கடந்த ஆண்டு நடைபெறவில்லை.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களிடையே ரஷ்ய அதிபர் புடின் இன்று உரையாற்றினார். இது அந்நாட்டு தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
நட்பு நாடுகள் தவிர அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகியவற்றில் இந்த பேச்சு ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது.
உக்ரைன் மீது போர் தொடங்கி வரும் வெள்ளிக்கிழமையுடன் (பிப் 24) ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் புடினின் இந்த பேச்சு அந்நாட்டு மக்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
“ரஷ்யா மீது போரை ஆரம்பித்தது அவர்கள் (மேற்கத்திய நாடுகள்) தான்” என்று கூறிய புடின் “போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா ஆயுதம் ஏந்தி போராடி வருவதாகக்” கூறினார்.
போர் மூலம் ரஷ்யாவை வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்த அவர்கள் ரஷ்ய கலாச்சாரம், மதம் மற்றும் நம்பிக்கை மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தவிர, ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால் அவர்கள் “எதையும் சாதிக்கவில்லை, எதையும் சாதிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
“நாங்கள் உக்ரேனிய மக்களுடன் சண்டையிடவில்லை, அந்நாட்டை ஆக்கிரமித்துள்ள மேற்கத்திய எஜமானர்களின் கைப்பாவையாக செயல்படும் உக்ரைன் ஆட்சியாளர்களுக்கு எதிராகவே சண்டையிடுகிறோம்” என்றும் கூறினார்.
மேலும், அண்டை நாடுகளுக்கு இடையிலான சண்டையை உலக நாடுகளிடையேயான மோதலாக முன்னெடுக்க மேற்கத்திய நாடுகள் முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார்.
தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரேனிய பகுதியில் இருந்து ரஷ்ய ராணுவத்தை பின்வாங்குவதற்கான எந்தவொரு எண்ணமும் இல்லை என்று உறுதிபட தெரிவித்த புடின். சமாதானப் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்ததுடன் ரஷ்யா தனது இருப்புக்காகப் போராடி வருவதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்தில் நடைபெற இருக்கும் மாநாட்டில் இன்று பேச இருக்கிறார்.
புடினின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பைடனின் உரை இருக்கும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கும் நிலையில் “அதுபோன்று எதுவும் இருக்காது” என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.