ரஷ்ய அதிபர் புடின் விஷம் வைத்து கொல்லப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அடுத்த அதிபராக பதவியேற்க இரண்டாம் கட்ட தலைவர்கள் வரிசைகட்டி காத்திருப்பதாகவும் உக்ரைன் உளவுத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டிருக்கிறது.

உக்ரைன் மீதான போர் காரணமாக அதிபர் புடின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் அவர் இரண்டாம் கட்ட தலைவர்களின் ஆதரவை இழந்திருப்பதாகவும், அடுத்த அதிபராக மத்திய பாதுகாப்பு சேவையின் (எப்.எஸ்.பி.) இயக்குனர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக உக்ரைன் உளவுத்துறையை மேற்கோள்காட்டி பிரிட்டன் செய்தி நிறுவனமான டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

அலெக்சாண்டர் போர்ட்னிகோவ்

போர்ட்னிகோவ் மற்றும் புடின் இருவரும் கே.ஜி.பி. எனப்படும் ரஷ்ய உளவு அமைப்பில் சோவியத் காலம்தொட்டு பணியாற்றியவர்கள் என்பதும் அவர்களுக்கு இடையே அடுத்த அதிபர் யார் என்ற கருத்துவேறுபாடு எழுந்துள்ளதாகவும் அதன் காரணமாக திடீர் நோய், விஷம் அல்லது தற்செயலாக வேறு காரணங்களால் புடின் கொல்லப்படலாம் என்றும் டெய்லி மெயில் கூறியுள்ளது.

கிரெம்ளின் மாளிகையின் முக்கிய பொறுப்பில் உள்ள பலரிடம் போர்ட்னிகோவுக்கு செல்வாக்கு உள்ளதால் இது அதிகார சண்டைக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய அதிகாரி ஒருவர், அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தங்களை நல்லவர்கள் என்று பொதுமக்களிடம் காட்டிக்கொள்வதில் முனைப்பு காட்டி வருகின்றனர். ரஷ்ய உளவுத்துறைக்கு அரசுக்கும் இடையே முரண்பாட்டை விதைப்பதற்கு உளவுத்துறையினரிடம் வதந்திகளை பரப்புவதற்குமே இதுபோன்ற செய்திகள் பரப்பப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

மேலும், உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்பாக ரஷ்யாவின் வெளிநாட்டு புலனாய்வு சேவை பிரிவின் தலைவர் செர்ஜி நரிஷ்கினுக்கும் அதிபர் புட்டினுக்கும் இடையே கடந்த ஒருமாதமாக கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், அவரும் அடுத்த அதிபருக்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் ரஷ்யா தன் மீது இவ்வளவு பெரும் தாக்குதலை நடத்தக்கூடும் என்பதை கணிக்கத் தவறிய உக்ரைன் உளவுத்துறையின் இந்த கூற்று எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து எதுவும் கூறமுடியாது என்றும் டெய்லி மெயில் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.