மாஸ்கோ
ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷிஸ்கின் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்று ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது. அமெரிக்கா முதல் இடத்தில் இருந்தாலும் அடுத்த இடங்களில் ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பா கண்ட நாடுகளே உள்ளன. இந்த பாதிப்பில் ரஷ்யாவும் தப்பவில்லை, இது வரை ரஷ்யாவில் பாதிப்பு எண்ணிக்கை 1.06 லட்சத்தைத் தாண்டி அதில் 1073 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று ஒரே தினத்தில் ரஷ்யாவில் 7,069 பேர் பாதிக்கபட்டுள்னர் இதுவரை 1,16,619 பேர் குணம் அடைந்துள்ளனர். ரஷ்ய அதிபர் புடின் அந்நாட்டில் மே 11 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளார். ஆயினும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்ய நாட்டின் பிரதமர் மிகைல் மிஷிஸ்தின் சமீபத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் அவருக்கு கொரோனா உள்ளது உறுதி ஆகி உள்ளது.
இதையொட்டி ரஷ்யப் பிரதமர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அத்துடன் தாம் தற்காலிகமாக அனைத்து பணிகளில் இருந்தும் ஒதுங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதுவரை ரஷ்யப் பிரதமருக்கு எவ்வாறு கொரோனா தொற்றியது என்பது குறித்து எவ்வித தகவலும் வெளி வரவில்லை. ஏற்கனவே பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தது நினைவு இருக்கலாம்.