மாஸ்கோ
ரஷ்யாவில் உள்ள செல்வந்தர்கள் பொருளாதாரத் தடைகள் காரணமாக தங்கள் உல்லாசப் படகுகளை மாலத்தீவுக்கு மாற்றி உள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையொட்டி ரஷ்யா மீது பொருளாதாரத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா இனி அமெரிக்க டாலர் மற்றும் ஐரோப்பிய யூரோ ஆகியவற்றின் மூலம் வர்த்தகம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள பல வர்த்தக கோடீசுவரர்கள் கடும் கலக்கம், அடைந்துள்ளனர். எனவே தங்களின் உல்லாசப் படகுகளை ரஷ்யாவில் இருந்து இடமாற்றம் செய்து வருகின்றனர். நேற்று ஜெர்மனிக்கு மாற்றப்பட்ட ஒரு உல்லாச படகு ஜெர்மன் அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஜெர்மன் அதிகாரிகள் எவ்வித தகவலும் அளிக்க மறுத்துள்ளனர்.
ஆயினும் செய்தி நிறுவனங்கள் ரஷ்யச் செல்வந்தர் உஸ்மானோவ் என்பவருக்குச் சொந்தமான 600 மில்லியன் டாலர் மதிப்புள்ள படகை ஜெர்மனி பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. பல ரஷ்யச் செல்வந்தர்கள் தங்கள் உல்லாசப் படகுகளை ரஷ்யாவில் இருந்து மாலத்தீவு கடற்கரைக்கு எடுத்துச் சென்று நிறுத்தி வைத்துள்ளனர்.