புதுடெல்லி: ககன்யான் விண்கலத்தில் பயணம் செய்வதற்கு ஏதுவாக, தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யா பயிற்சியளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கூறப்படுவதாவது; வரும் நவம்பர் மாதம் 4 இந்திய விண்வெளி வீரர்கள் ரஷ்யாவுக்கு செல்வார்கள். அங்கே அவர்கள், யூரிகாகரின் விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் 15 மாதங்கள் பயிற்சி பெறுவார்கள்.
அந்தப் பயிற்சி முடிந்த பின்னர் இந்தியாவிற்கு திரும்பி இங்கும் 6 முதல் 8 மாதங்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள். இதற்கான ஒப்பந்தம் ரஷ்யாவின் கிளாவ்கோஸ்மாஸ் மற்றும் இஸ்ரோ ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கையெழுத்தானது.
இந்த திட்டத்திற்காக ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த பிரிவை இஸ்ரோ அமைப்பு உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான நீடித்த அனுபவம் கொண்ட ரஷ்யாவின் உதவியைப் பெற்று ககன்யான் திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.