உக்ரைனில் படித்து வந்த சுமார் 20,000 இந்தியர்களில் இதுவரை சுமார் 3,000 பேர் மட்டுமே தாயகம் திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ளவர்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளது.

கார்கிவ், சுமி ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பிணைக்கைதிகளாக உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

மேலும், இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு மாணவர்களை மீட்க ரஷ்யாவிடம் முறையிடுமாறு கேட்டுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து நேற்றிரவு ரஷ்ய அதிபர் புடினிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க தேவையான உதவிகளை ரஷ்யா மேற்கொள்ளும் என்று அப்போது அவர் உறுதியளித்ததாக இந்திய தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் இவர்களை மனித கேடயமாக அவர்கள் பயண்படுத்தி வருவதாகவும் இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் இவர்களின் உயிருக்கு உக்ரைன் அரசு தான் பொருப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா ஆகிய இருநாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டுவதால் இந்திய மாணவர்களின் நிலை மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. இவர்களை மீட்க தேவையான அடுத்தகட்ட நடிவடிக்கை குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.