உக்ரைன் மீது இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் ஓரு கின்சல் (Kinzhal) ஹைப்பர்சோனிக் ஏவுகணை மற்றும் ஏழு Kh-101 க்ரூஸ் ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதில் 6 Kh-101 க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கூறியுள்ள உக்ரைன் இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவின் ATACMS மற்றும் பிரிட்டனின் ஸ்டார்ம் ஷேடோ (Storm Shadow) க்ரூஸ் ஏவுகணைகளை ரஷ்யா மீது உக்ரைன் நேற்று ஏவியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவின் தெற்கு அஸ்ட்ராகான் பகுதியில் இருந்து மத்திய-கிழக்கு நகரமான டினிப்ரோவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பை குறிவைத்து இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா ஏவியுள்ளதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

1000 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள இலக்கை சென்று தாக்கக்கூடிய திறன் படைத்த ரஷ்யாவின் இந்த ICBMகள் அணுஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டவை என்றும் அவை போர்கப்பல்களில் இருந்து செயல்படுத்தக்கூடியது என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்க ராணுவ தளவாடங்களை ரஷ்ய பிராந்தியத்தில் உள்ள நீண்டதூரம் இலக்குகளை தாக்கி அழிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதியளித்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா அணுஆயுதத்தை பயன்படுத்தும் என்று புடின் எச்சரித்தார்.

இந்த நிலையில் கடந்த 33 மாதங்களாக தொடர்ந்து வரும் உக்ரைன் – ரஷ்யா போரில் முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதும் இதில் அணுஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டதாக உறுதிசெய்யப்படவில்லை.

தவிர, ரஷ்யா வான்வழி தாக்குதலுக்கு தயாராகி வருவதாகக் கூறி உக்ரைனில் உள்ள தனது தூதரகத்தை அமெரிக்கா நேற்று மூடிய நிலையில் இந்த ICBM தாக்குதல் குறித்து உக்ரனை அது எச்சரித்ததா என்பது குறித்து தகவல் இல்லை.

அதேவேளையில், அமெரிக்காவைத் தொடர்ந்து கனடா, இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், ஹங்கேரி உள்ளிட்ட அனைத்து நேட்டோ நாடுகளும் தூதரகங்களை மூடின.

ஏற்கனவே ரஷ்யா தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தப்போவதாகக் கூறி அமெரிக்க தூதரகத்தை மூடியது உக்ரேனியர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டியதை அடுத்து இன்று மீண்டும் தனது தூதரகத்தை திறக்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.