மாஸ்கோ:
ஷ்யா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக் வி என்ற கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் கட்ட தொழிற்சாலை உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் காமாலேயா ஆராய்ச்சி நிறுவனமும், பாதுகாப்பு அமைச்சகமும் இணைந்து அந்நாட்டின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரித்துள்ளன. இதனை ஆக., 11-ம் தேதி அந்நாட்டு அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஸ்புட்னிக் வி என பெயரிட்டார். இத்தடுப்பூசியை தனது மகளுக்கு கூட செலுத்தியுள்ளதாகவும், அவர் நன்றாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். தடுப்பூசி தயாரிப்புக்கு முன்பே ஒரு கோடி மருந்துகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வெளிநாட்டு பங்குதாரர்களுடன் இணைந்து 5 நாடுகளில் ஆண்டுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் உற்பத்தி செய்ய தயாராக உள்ளோம்.

இத்தடுப்பூசி கொரோனா வைரஸிடமிருந்து 2 ஆண்டுகளுக்கு பாதுகாப்பை தரும் என காமாலேயாவின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் கூறியுள்ளார். இந்நிலையில் தடுப்பூசிக்கான தொழிற்சாலை உற்பத்தியை ரஷ்யா துவங்கியுள்ளது. முதலில் அந்நாட்டு மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் போன்ற முன்கள வீரர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படும். பின்னர் அனைத்து ரஷ்யர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

தற்போது உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசி இம்மாத இறுதியில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கின்றனர். அமெரிக்கா, ஜெர்மன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ரஷ்ய தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து ஏற்கனவே கேள்வி எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.