உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை துவங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தாக்குதலில் ஒருவர் பலியானதாகக் கூறப்படுகிறது.

லிவிவ் நகர் மீது நடத்தப்பட்ட டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் சுமார் 15 பேர் படுகாயமடைந்ததாக உக்ரைன் கூறியுள்ளது.

கடந்த வார இறுதியில் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இடையே அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவராகளைச் சந்தித்து டிரம்ப் பேசிய நிலையில் ரஷ்யா உடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்த இழுபறி நீடித்து வருகிறது.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற கருத்தை உக்ரைன் அதிபர் ஏற்க மறுத்த நிலையில் ஸ்விட்சர்லாந்து அல்லது ஆஸ்திரியாவில் பேச்சு நடத்த வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக குறைந்திருந்த ரஷ்ய தாக்குதல் நேற்றிரவு மீண்டும் தொடங்கியதாகவும் இன்று காலை வரை அது நீடித்ததாகவும் உக்ரைன் கூறியுள்ளது.

மேலும், 614 டிரோன் மற்றும் 40 ஏவுகணைகளை ரஷ்யா வீசியதாகவும் இது ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என்றும் கூறியுள்ள உக்ரைன் 577 ரஷ்ய டிரோன்களை இடைமறித்து அழித்ததாகத் தெரிவித்துள்ளது.