டெல்லி: ‘ரஷ்யாவும் உக்ரைனும் போரை நிறுத்த வேண்டும்’ என்று இந்தியா – பிரிட்டன் கூட்டாக வலியுறுத்தி உள்ளது. உக்ரைன் போர் 2023 இறுதி வரை நீடிக்கும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.
2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குஜராத் சென்ற அவர் அங்குள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டதோடு, தொழில் முதலீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட போரிஸ் ஜான்சன் டெல்லி வந்து சேர்ந்தார்.
டெல்லி வந்த குடியரசுத் தலைவர் மாளிகையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது பிரதமர் மோடி நேரடியாக சென்று வரவேற்றார். இந்தியா – இங்கிலாந்து இடையேயான உறவு, இவ்வளவு வலுவாகவும், சிறப்பாகவும் இருக்கும் என தாம் நினைக்கவில்லை என போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து டெல்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டைச் சேர்ந்த பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியும், போரிஸ் ஜான்சனும் ஆலோசனை நடத்தினர். மேலும், இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்வோருக்கான விசா நடைமுறைகளை எளிமைப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.இருநாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தரப்பு விவகாரங்களை தவிர்த்து உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை மூலமாக சமாதானம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதா என்பது பற்றி, விரிவாக பேசப்பட்டது.
இதன் பின்னர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது உக்ரைனும், ரஷ்யாவும் உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பிரிட்டன் பிரதமரின் இந்திய பயணத்தின்போது சுமார் 11 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மென்பொருள், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் 11 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.