சென்னை: செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலும், இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்புற உள்ளாட்சி தேர்தலும் நடைபெறும் என தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறி உள்ளார்.
தமிழ்நாட்டிலல் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டன. இந்த தேர்தலில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றவர்கள், தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுத்தனர். இதே போல் ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்தனர். மாவட்ட ஊராட்சி உறுப்பினராக தேர்வானவர்கள் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுத்தனர். இவர்கள் பதவி ஏற்பு 2021 ஜனவரியில் நடைபெற்றது.
இதற்கிடையில், புதிய மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடையாமல் இருந்ததால் அப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், செப்டம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டு உள்ளது.
இதையடுத்து விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது. வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, வாக்கு சீட்டுகளை அச்சடிப்பது, வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக இப்போதே ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, ‘’செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்; இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று கூறினார்.
மேலும், சென்னையில் 500 இடங்கள் குளங்களாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது; தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இந்த குளங்களில் மழைநீரை சேமித்து, நிலத்தடி நீர்வளத்தை பெருக்க உள்ளோம். சென்னையின் ஒருநாள் குடிநீர் தேவை 1300 எம்.எல்.டியாக இருக்கிறது. 30 ஆண்டுகள் தேவையை கணக்கில் கொண்டுதான் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்தோம்’’ என கூறினார்.