டில்லி
நீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் புதிய விதிகளை இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவுதல் கட்டுக்குள் வராததால் நாடெங்கும் நேற்றுடன் முடிவடைந்த ஊரடங்கைப் பிரதமர் மோடி மே 3 வரை நீட்டித்தார். அப்போது அவர் புதிய ஊரடங்கு விதிகள் இன்று அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் உள்ள விவரங்கள் வருமாறு.
அரசு வரும் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு சில விதி தளர்வுகளை அனுமதித்துள்ளது. ஆனால் மாநில, யூனியன் பிரதேச, மாவட்ட நிர்வாகம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு இவை செல்லாது. அங்கு எவ்வித உள் மற்றும் வெளிப்புற பயணங்களுக்கு அனுமதி இல்லை. அத்தியாவசிய சேவைகள், மருத்துவ உதவி உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
ஏப்ரல் 20 ஆம் தேதி உள்ள நிலவரங்களைப் பொறுத்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம்.
ஊரடங்கு விதிகளை மீறாமல் மாநில அரசு முடிவு எடுக்க வேண்டும்.
ஏப்ரல் 20க்கு பிறகு இயங்க அனுமதிக்கப்பட்டவை
ரிசர்வ் வங்கி, வங்கிகள்,ஏடிஎம்கள், அத்தியாவசிய வர்த்தகம் ஆகியவற்றுக்கு அனுமதி,
அவசியம் மற்றும் அவசியமற்றவை எனப் பாகுபாடு இன்றி சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி
வேளான் பணிகளுக்கான விதைகள், உரங்கள் உள்ளிட்டவை, வாங்குவது மற்றும் விளை பொருட்கள் விற்பனை, நிலத்தில் பணி புரிதல் ஆகியவற்றுக்கு அனுமதி
உள்நாட்டு மீன் பிடி தொழிலுக்கு அனுமதி,
பால் மற்றும் பால் பண்ணைகள், கோழிப்பண்ணை,, கால்நடை பண்ணைகள் இயங்க அனுமதி
தேயிலை, காப்பி, ரப்பர் தோட்ட பணிகள், மருத்துவ பணிகள், சமூக சேவைகள் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி
கிராமப்புறங்களில் மற்றும் மக்கள் அதிகம் இல்லாத பகுதிகளில் உள்ள தொழிலகங்கள் இயங்க அனுமதி
கட்டுமானப்பணிகளுக்கு அனுமதி
100 நாள் வேலைத்திட்டப் பணிகளுக்கு அனுமதி
ஐடி, இ காமர்ஸ், அரசின் டேட்டா பதிவகங்கள் ஆன்லைன் கல்வி ஆகியவற்றுக்கு அனுமதி
முக்கியமாக இவ்வாறு அனுமதிக்கப்படும் இடங்களில் பணி புரிவோர் அவசியம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்
அனுமதிக்க படாதவைகள்
மே 3 வரை மக்கள் கூடும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், உள்ளிட்டவை இயங்கக்கூடாது.
மத நிகழ்வுகளுக்கு தடை உள்ளதால் வழிபாட்டுத்தலங்கள் மூடப்படும்.
ரயில், விமானம், சாலைப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.
தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தடை
திரையரங்கம், ஷாப்பிங் மால், பொழுதுபோக்கு இடங்கள் இயங்க தடை