சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?  என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தில்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க மறுத்துள்ளது.  இது சமூக ஆர்வலர்களிடையே விவாதப்பொருளாகி உள்ளது.

திமுக அரசு, பெண்களின் வாழ்வாதாரத்தை காப்பதாக கூறி, லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’  என்ற பெயரில் மாதம் ரூ.1000 இலவசமாக வழங்கி வருகிறது.  தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத் தொகையாக ரூ.1,000 அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் தமிழக அரசின் திட்டமாகும்.  குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம்  என்றும்,   ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளது. ஆனால், இது வாக்கு வங்கி  அரசியல் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக ஏராளமான பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அவர்களுடைய விண்ணப்பங்களை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கடந்த மாதம் வரையிலான நிலவரப்படி 1 கோடியே 14 லட்சம் பேர் தமிழகம் முழுவதும் பயன் அடைந்து வருகின்றனர். இந்த திட்டத்துக்காக 2023-24-ம் ஆண்டில் ரூ.8 ஆயிரத்து 123 கோடியும், 2024-25-ம் ஆண்டில் ரூ.13 ஆயிரத்து 720 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது முந்தைய ஆண்டை விடவும் இந்த ஆண்டு சுமார் 59 சதவீதம் அளவுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடை தமிழக அரசு அதிகரித்து இருக்கிறது.

இந்தநிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு? புதிதாக எத்தனை பேர் இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்து இருக்கிறார்கள்?, அவர்களில் எத்தனை பேரை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது? என்ற சில கேள்விகளை  தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்  ஒருவர் அரசுக்கு கேள்வியாக கேட்டு இருந்தார். அதற்கு தமிழக அரசு தகவல் தெரிவிக்க மறுத்து விட்டது.

இது  “அரசின் கொள்கை முடிவு குறித்த தகவல்கள் என்பதால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி தகவல் வழங்க இயலாது” என்று அரசு மறுத்துவிட்டது. இந்த பதில் விவாதப்பொருளாக மாறி வருகிறது.