லக்னோ:
“கும்பல் கொலை, சமூக விரோத செயல்பாடு” குறித்து குழந்தைகள் தெரிந்துகொள்ள ஆர்எஸ்எஸ் ராணுவ பள்ளியை உ.பி.யில் தொடங்குகிறதா என்று முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பரப்பும் வகையில், உ.பி. மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் ராஜேந்திர சிங்கை கவுரவப்படுத்தும் வகையில் ராஜ்ஜு பயா சைனிக் வித்யா மந்திர் என்ற பெயரில் ராணுவ பயிற்சி பள்ளியை தொடங்க இருக்கிறது. இந்த பள்ளி அடுத்த ஆண்டுசெயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ராணுவ பள்ளிக்கு முன்னாள் ராணுவ வீரர் சவுதரி ராஜ்பால் சிங் என்பவர் அளித்த 8 ஏக்கர் நிலத்தில் ஆண்களுக்கான உறைவிடப்பள்ளி கட்டுமானப்பணி நடந்துவருகிறது. இந்தப் பள்ளிக்கும் பாஜகவின் பிராந்திய தலைவர் டிகே. சர்மா தலைமையில் பள்ளி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ பயிற்சியோடு, பண்புநலன்களை வளர்ப்பது குறித்தும் சொல்லித்தரப்படும் எனவும் தெரிய வந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கல்வி பிரிவான வித்யா பாரதி, இந்தப் பள்ளியை நடத்தும் என்றும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை கற்பிக்கும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. வித்யா பாரதி, தற்போது நாடெங்கிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை நடத்துகிறது.
மத்திய அரசே இராணுவ பள்ளிகளை நடத்திக்கொண்டிருக்கும்போது, வலதுசாரி சிந்தனையுள்ள, ஆர்எஸ்எஸ் அமைப்பு ராணுவ பள்ளிகளை நடத்துவதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பிளவுபட்ட சித்தாந்தத்தைப் பின்பற்றுவதற்காக ஆர்.எஸ்.எஸ்ஸை குற்றம் சாட்டிய அகிலேஷ், அதன் பள்ளியில் உள்ள மாணவர்கள் “கும்பல் கொலை, சமூக விரோத செயல்பாடு மற்றும் வெறுப்பு பற்றி அறிந்து கொள்வார்கள், ஏனெனில் ஆர்.எஸ்.எஸ் அதன் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற இந்த பள்ளியைத் திறக்கிறது” என்றார்.
அரசியல் ஆதாயங்களுக்காக ஆர்.எஸ்.எஸ். இதைச் செய்வதாகவும், “சித்தாந்த அடிப்படையில் ஒற்றை மதத்தைக் கொண்ட அந்த அமைப்பு, மற்ற மதங்களுக்கு எதிரான, தலித்துகள், பெண்களுக்கு எதிரான கண்ணோட்டம் உடையது. ராணுவத்தின் கண்ணோட்டத்துக்கும் இது எதிரானது. ராணுவம் அரசியலற்றது, குறிப்பாக, மதச்சார்பற்றது. எனவே, ஒற்றை மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல், மதவாத போதனைகளுக்கு அங்கே இடமில்லை” எனவும் விமர்சித்துள்ளார்.