பாலக்காடு,
பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவை மீறி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பள்ளியில் தேசிய கொடியை ஏற்றியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கேரள மாநிலம் பாலக்கோடு பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில், இன்று ( குடியரசு தினம்) ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தேசியக்கொடி ஏற்ற இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இதையடுத்து கேரள அரசு சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், ‘ஒவ்வொரு பள்ளியிலும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே குடியரசு தினத்தன்று கொடியேற்ற வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களே கொடியேற்ற வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
மோகன் பகவத் பள்ளியில் கொடியேற்றக்கூடாது என்ற நோக்கிலேயே ஆளும் கம்யூனிஸ்டு அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கேரள அரசின் உத்தரவை நிராகரிப்பதாகவும், திட்டமிட்டபடி, தனியார் பள்ளியில் மோகன் பகவத் கொடியேற்றுவார் என்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அறிவித்தது.
அதன்படி இன்று காலை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தனியார் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கேரள அரசு வெளியிட்ட சுற்றறிக்கையை நிராகரித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதன் காரணமாக அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.