டில்லி

ட ஒதுக்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்த ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு விடுத்துள்ளார்.

டில்லியில் ஆர் எஸ் எஸ் துணை அமைப்பான  சிக்‌ஷா சன்ஸ்கிருதி உத்தான் நியாஸ் சார்பில் ஞானோத்சவ் என்னும் நிகழ்வு நடந்தது.   இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த நிகழ்வு நேற்று முடிவடைந்தது.  இந்த நிகழ்வில் புதிய கல்விக் கொள்கைகள் உள்ளிட்டவை குறித்து  விவாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் நிறைவு விழாவில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.    அப்போது மோகன் பகவத், “சங்கத்தை (ஆர் எஸ் எஸ்) சேர்ந்தவர்கள் பலர் பாஜக மற்றும் அரசில் உள்ளனர். அவர்கள் சங்கத்தின் அபிப்ராயத்தை கேட்பது வழக்கம்.  ஆனால் அவர்கள் அதை அப்படியே ஒப்புக் கொள்வதும் அல்லது எதிர்ப்பதும் அவர்கள் சொந்த விருப்பமாகும்.   பாஜக அரசில் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட அதிக வாய்ப்புக்கள் உண்டு.

இட ஒதுக்கீடு குறித்து தற்போது கடும் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.   இட  ஒதுக்கீட்டை ஆதரிப்போரைப் போல் எதிர்ப்போரும் பலர் உள்ளனர்.   இது குறித்து ஒரு பேச்சு வார்த்தை நடத்த நான் அனைவரையும்  அழைக்கிறேன். அந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளும் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள் அதை எதிர்ப்பவர்கள் மன நிலையை கருத்தில் கொண்டு பேச வேண்டும்.   அதைப்போலவே எதிர்ப்பவர்களும் ஆதரிப்போர் மனநிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.