மோடி பிரதமராக பொறுப்பேற்ற இந்த பத்தாண்டுகளில் பாஜக – ஆர்.எஸ்.எஸ். இடையிலான உறவு. “ச்சீ…ச்சீ… இந்தப் பழம் புளிக்கும்” என்பது போல் உள்ளதாகக் கூறப்பட்டது.

இது உண்மை என்பது, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி சுதந்திரமாக செயல்படும் அளவிற்கு வளர்ந்துவிட்டதாகவும் அது இனி ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங் எனும் பேரினவாத அமைப்பின் கையைப் பிடித்து நடக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் ஜெ.பி. நட்டா உறுதிபட தெரிவித்துள்ளார்.

மோடி – அமித் ஷா பிடியில் பாஜக சிக்கியதில் இருந்து அக்கட்சியின் முக்கிய பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகள் யாரும் நியமிக்கப்படவில்லை.

தவிர, ஆர்.எஸ்.எஸ். சொல்லும் கருத்துக்களையும் மோடி ஏற்பதாகத் தெரியவில்லை, என்னதான் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை அவர் நிறைவேற்றி வருவதாகக் கூறப்பட்டாலும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் வார்த்தைகளுக்கு மரியாதை அளிப்பதாகவோ அல்லது எந்த ஒரு முக்கிய விஷயத்திலும் அவர்களுடன் ஆலோசனை நடத்தவில்லை என்று மோடி மீது அதிருப்தியில் உள்ளனர்.

மேலும், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மோடி-யை நேரடியாக சந்தித்து எந்தவொரு விவாதமும் செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேபி ஹெட்கேவார் மற்றும் எம்எஸ் கோல்வால்கரின் சமாதிகளை பார்வையிட மறுத்ததும், அவர் பிரதமராக உதவியதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு நன்றி தெரிவிக்காததும் ஆர்எஸ்எஸ் மீதான அவரது அலட்சியத்துக்கு சான்றாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாஜக-வுக்காக களத்தில் இறங்கி பணியாற்ற ஆர்வம் காட்டவில்லை.

மாறாக, மோடி தலைமையிலான பாஜக தனது சொந்த பலத்தை நிரூபிக்க பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. இந்த முயற்சியில் மோடி வெற்றிபெற்றால் அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

அதேவேளையில் மோடி பிரதமராக பொறுப்பேற்க தேவையான பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் சங் பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படக்கூடிய ராஜ்நாத் சிங் போன்றவர்களை அரியணையில் ஏற்றி ஆர்.எஸ்.எஸ். தனது இருப்பை உறுதிசெய்ய காத்திருக்கிறது.

இருப்பினும், தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். என்பது சித்தாந்த ரீதியிலான அமைப்பு பாஜக அரசியல் கட்சி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தயவு பாஜக-வுக்கு தேவை இல்லை என்பது போல் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா பேசியிருப்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை மேலும் உசுப்பேற்றி இருப்பதுடன் பாஜக – ஆர்.எஸ்.எஸ். இடையிலான மோதலை வெளிச்சத்திற்குப் கொண்டுவந்துள்ளது.