சென்னை
திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அதிமுக பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேற்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில்,
”திமுகதான் காங்கிரஸ் மிரட்டலுக்குப் பணிந்தது. அதிமுக பாஜ கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது’’ எனப் பேசியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த போது தமிழ்நாட்டிற்கு திமுக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். மாறாகத் தமிழ்நாட்டுக்கு துரோகங்களைத்தான் பழனிசாமி செய்தார்.
நீட் தேர்வு, மதுரை எய்ம்ஸ் , காவிரி, மேகதாட்டு பிரச்சினை, ஜல்லிக்கட்டு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு எனத் தமிழ்நாட்டு உரிமைக்காக திமுக தொடர்ந்து போராடி வருகிறது. இப்படி எதற்கும் குரல் கொடுக்காத பழனிசாமி, தமிழகத்தின் உரிமைகளுக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் அயராது போராடி வரும் திமுகவை பற்றிப் பேச என்ன திராணி இருக்கிறது? தனது குடும்பத்தைக் காப்பாற்ற மோடி அரசின் அதிகார அமைப்புகளுக்குப் பயந்து, பாஜவுடன் சேர்ந்த அமலாக்க துறை கூட்டணிதான் அதிமுக கூட்டணி. .
ஒன்றிய பாஜவின் காலடியில் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து தமிழ்நாட்டைச் சீர்கெடுத்த ஆட்சிதான் அதிமுக பாஜ ஆட்சிகள். இந்தத் துரோகக் கூட்டணிக்குக் கடந்த தேர்தல்களிலேயே தமிழ்நாட்டு மக்கள் தோற்கடித்துத் தக்கப் பதிலடி கொடுத்தனர். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இந்த அடிமை அமலாக்க துறை கூட்டணியை மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள். சுயநலப் பச்சோந்திகளுக்குத் தமிழ்நாட்டில் என்றுமே இடமில்லை. பாஜவின் காலடியில் வீழ்ந்து அடிமை சேவகம் செய்யும் பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலோடு முடியப் போவது உறுதி”
என்று தெரிவித்துள்ளார்.,